முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு விளக்கமறியல்
புதிய இணைப்பு
முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக (நிர்வாக சீர்திருத்தங்கள்) பணியாற்றிய காலத்தில் செய்த ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றியபோது, அவர் தனது உத்தியோகப்பூர்வ பணியாளர்கள் என்று கூறி நான்கு ஊழியர்களைப் பணியமர்த்தினார் என இலஞ்ச ஆணைக்குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒருவர் தனது சொந்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பணிக்கு அனுப்பப்பட்டிருந்த வேளையில், மற்றொருவர் அலுவலகம் சாராத பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
அலுவல் ரீதியான பொறுப்புகள் வழங்கப்படாத போதிலும், அரச நிதியிலிருந்து மொத்தம் 2,768,836.14 ரூபாய் மதிப்பிலான சம்பளம் வழங்க அவரால் ஏற்பாடு செய்யப்பட்டதால், அரசிற்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (05) காலை முன்னிலையாகியுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கானவே அகிலவிராஜ் காரியவசம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்தமை மற்றும் அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காகவே அகிலவிராஜ் காரியவசம் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
you may like this video