அரசாங்கத்தின் ஊழல் குற்றச்சாட்டுக்களை மூடி மறைப்பதற்காகவே இந்த முயற்சி..! முன்னாள் பிரதி சபாநாயகர் குற்றச்சாட்டு
பாரியளவில் எரிபொருள் பயன்பாட்டின் மூலம் அரசாங்க நிதியைத் துஷ்பிரயோகம் செய்ததாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளைத் தாம் முழுமையாக நிராகரிப்பதாக முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு தனது விளக்கங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் பயன்பாடு
அதில் தொடர்ந்து குறிப்பிட்டுள்ளதாவது, எரிபொருள் பயன்பாடு தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகள் குறித்துச் சரியான முறையில் ஆராயாமல், எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய மின்னணு ஊடகங்கள் வாயிலாகப் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

எனது பதவிக் காலத்தில் சட்டபூர்வமாகத் எனக்கு உரித்தான ஒதுக்கீடுகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வரம்புகளுக்கு உட்பட்டு மட்டுமே எரிபொருள் பெறப்பட்டது. அது தொடர்பான அனைத்து உத்தியோகபூர்வ ஆவணங்களும் அறிக்கைகளும் என்னிடம் உள்ளது.
சரியான விசாரணை இன்றி ஊடகங்கள் முன் இவ்வாறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது வருத்தத்திற்குரியது.
ஊழல் குற்றச்சாட்டுக்களை மூடி மறைக்கத் திட்டம்
பிரதி சபாநாயகராகக் கடமையாற்றுவதற்குப் பொருத்தமான உத்தியோகபூர்வ வாகனம் இல்லாததால், வெளியிலிருந்து வாடகை அடிப்படையில் வாகனத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புத் எனக்கு இருந்தது.

அவ்வாறு வெளியிலிருந்து வாகனத்தைப் பெற்றிருந்தால் பெருந்தொகை பணம் செலவாகியிருக்கும் என்பதால், அந்த வாடகைக் கட்டணத்திற்காகச் செலவிடப்படவிருந்த பணத்தைச் சேமிக்கும் வகையில் நான் செயற்பட்டேன்.
முன்னாள் சபாநாயகர்கள் மற்றும் பிரதி சபாநாயகர்கள் தொடர்பில் காணப்பட்ட பாரம்பரியங்கள், சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமையவே நான் பதவியில் செயற்பட்டேன்.
எவ்வித சட்டவிரோதச் செயல்களிலும் ஈடுபடவில்லை. இதனிடையே, தற்போதைய அரசாங்கத்தில் பதவி வகிக்கும் மற்றும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நபர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மூடிமறைக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் நான் நம்புகின்றேன் என்றார்.