நாட்டுப்பற்றாளர் நடேசனின் 19ஆவது ஆண்டு நினைவு இன்று (Video)
உண்மையையும் பக்கம் சாரா தன்மையையும் தம்மிரு கண்களென, உறுதியெனப்பூண்ட பாரம்பரியமான ஊடகக் கோட்பாட்டுவாயிலாக ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகமொன்றை வேண்டி தனது எழுத்துக்களோடு பயணித்த ஈழத்தின் ஊடகப்போராளி ஐ. நடேசனின் 19ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றைய தினம் (31.05.2023) அனுஷ்டிக்கப்படுகின்றது.
தமிழ்த்தேசிய அரசியலையும் அதன் போக்கின் மீதான கரிசனைகளையும் நெஞ்சுரத்தோடு நேசித்த ஊடகர் ஐயாத்துரை நடேசனின் கூரிய பேனா முனை எழுத்துக்கள் யாரையெல்லாம் சுட்டியதோ அவர்கள் எல்லோரும் சேர்ந்து அந்த எழுத்துக்களுக்கு அச்சங்கொண்டு கௌரி நடேசன் என்ற ஜீ நடேசனின் எழுத்துக்களுக்கு இற்றைக்கு 19 ஆண்டுகளுக்கு முன்பதாக மட்டக்களப்பின் எல்லை வீதியில் வைத்து துப்பாகி வேட்டுகளால் மரணமென்னும் எல்லையை உருவாக்கி நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களைப் படுகொலை செய்தனர்.
எந்தச் சந்தர்ப்பத்திலும் தனது எழுத்துக்கள் யாருக்கும் பணிந்துவிடக்கூடாது என்பதிலும் தனது பயணம் தடம் மாறிவிடவோ மாற்றப்படவோ கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்த நடேசன் தான் வாழ்ந்த மட்டக்களப்பு மண்ணையும் மக்களையும் மிகுதியாக நேசித்தவர்.
ஒரு கணம் குருதிக் கண்ணீர் வடித்தன
அதன் காரணமாக அப்பகுதி மக்களின் நிலைப்பாடுகளையும் சரியான சந்தர்ப்பங்களில் சரியான முறையில் எடுத்தாளுவதை மேற்கொண்ட படியால் பிரதேச வாத சூழ்ச்சியை கருத்தியலாகக் காவித்திரிந்த பலரின் முகத்திரைகளைத் தனது எழுத்துகளின் மூலம் கிழித்தெறிந்தார்.
இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆயுத ஒட்டுக்குழு உறுப்பினர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் மிக நீண்ட பட்டியலில் ஐயாத்துரை நடேசன் அவர்களையும் இணைத்துக்கொள்ளச் செய்தனர்.
நீதியின் பார்வை மக்கிப்போன ஒரு நிகழ்வாக மட்டக்களப்பின் எல்லை வீதியில் துப்பாக்கி ரவைகள் உயிர் குடித்த நடேசனின் வெற்றுடல் கிடத்தப்பட்டிருந்த காட்சியைக் கண்ணுற்றவர்களின் இதயங்கள் யாவும் ஒரு கணம் குருதிக் கண்ணீர் வடித்தன.
நடேசனின் எழுத்துக்களை வாசித்த ஒவ்வொரு வாசகனுக்கும் இவ் உணர்வு நிச்சயமாக இருந்தே இருக்கும். இந்த ஊடகப்படுகொலையை வன்மையாகக் கண்டித்த தமிழர் தேசம் அமரர் ஐயாத்துரை நடேசன் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் என்ற தமிழர் தேசத்தின் உயர் கௌரவத்தை வழங்கியது.

ஐபிசி தமிழ் கனதியான வலிகளோடு நினைவேந்துகிறது.
இன்று 19 ஆண்டுகள் கடந்தும் நடேசன் உட்பட இலங்கை அரச ஆதரவு ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்ட ஒவ்வொருவருக்குமான நீதியும் காணல் நீராகவே காட்சி தருகிறது.
இலங்கையில் நீண்டு தொடரும் ஊடகவியலாளர்களுக்கெதிரான வன்முறைகளையும் ஆட்கடத்தல் படுகொலைகளும் என்று தீரும் என்பது விடை காண முடியாத ஒரு விடுகதையே.
இன்றைய நாளில் ஒரு செய்தியாளராகக் கடினமான காலங்களிலும் கூட காத்திரமான ஊடகப் பணியாற்றிய எமது ஊடக நண்பர் ஐயாத்துரை நடேசன் அவர்களை கனதியான வலிகளோடு நினைவேந்துகிறன்றோம்.
நெஞ்சுரத்தோடு தனது நேரிய ஊடகப் பணியைச் சீராக மேற்கொண்ட நடேசன் கொல்லப்படும் வரை இலங்கையின் பிரபல செய்தி ஊடகங்களின் மட்டக்களப்பு பிராந்திய செய்தியாளராகவும், அரசியல் பத்தி எழுத்தாளராகவும் பணியாற்றியதோடு எமது ஐபிசி தமிழ் வானொலியின் இலங்கைக்கான செய்தியாளராகவும் எம்மோடு மிக நெருங்கிப் பயணித்தவர்.
அன்றைய காலங்களில் தமிழ்த் தேசியம் சார்ந்த நிலைப்பாட்டையும் கள நிலவரங்களையும் சர்வதேச ரீதியில் எடுத்துச்சென்ற எமது ஊடக குழுமத்தின் உண்மைக்கான ஊடகப் பணியில் மிக முக்கியமான பங்களிப்பினை நல்கிய ஒரு ஊடகராக நாட்டுப்பற்றாளர் நடேசனை நாம் நினைவுகூருவது சாலப்பொருந்தும்.
யாழில் ஜயாத்துரை நடேசனின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் படுகொலை
செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக, யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசன் கடந்த 2004ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள தனது வீட்டில் இருந்து அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருக்கையில் , ஆயுத தாரிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.


செய்தி-தீபன்
நடேசனுக்கு வவுனியா ஊடக அமையம் அஞ்சலி
வவுனியா படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியா ஊடக அமையத்தின் ஏற்ப்பாட்டில் இன்று நடைபெற்றது.
வவுனியா ஊடக அமையத்தின் தலைவர் ப.கார்த்தீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்னாரது திருவுருவ படத்திற்கு, மலர்தூவி, ஒளிதீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.


அவர் தொடர்பான நினைவு பகிர்வுரையினை சிரேஸ்ட ஊடகவியலாளர் சக்திவேல்பிள்ளை பிரகாஸ் நிகழ்த்தியிருந்தார்.
நிகழ்வில் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டு அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.
செய்தி-ஷான்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |









பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan