தாக்குதலுக்கு உள்ளான விமானப்படை வீரரின் நடிப்பு அம்பலம்: விமானப்படை விளக்கம்
விமானப்படையின் கோப்ரலான பீ. ரத்னசூரிய மரம் ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளதுடன் பிரதேசவாசிகள் அது குறித்து வாழைச்சேனை பொலிஸாருக்கு அறிவித்திருந்தனர்.
பொலிஸார் விமானப்படை கோப்ரலை வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர். அவர் கட்டப்பட்ட மரத்தில் “ முரட்டு அரசியலுக்கு உதவும் கைக்கூலிகள் இப்படித்தான் கொல்லப்படுகிறார்கள்” என்று தமிழிலில் எழுப்பட்ட பதாகை ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வானில் வந்தவர்கள் கடத்திச் சென்றதாக பொலிஸாரிடம் கூறிய விமானப்படை வீரர்
இது தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். விடுமுறை முடிந்து திரும்பிக்கொண்டிருந்த தன்னை வான் ஒன்றில் வந்தவர்கள் கடத்திச் சென்று, கை,கால்களை கட்டி, மரத்தில் கட்டி வைத்து தாக்கியதாக ரத்னசூரிய பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
அவர் கூறியவை முன்னுக்கு பின் முரணாக இருந்ததன் காரணமாக தமிழ் மொழியில் எழுப்பட்டிருந்த வாசகம் தொடர்பில் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
இதன் போது அதனை எழுதியது தமிழ் மொழி தொடர்பான போதிய தெளிவில்லாத ஒருவர் எழுதி இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து விமானப்படை வீரர் தானே இதனை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ள அவர்,
இணைத்தள சூதாட்டத்திற்கு அடிமை
இணையத்தள சூதாட்டத்திற்கு அடிமையானதால், .முகாமில் உள்ள ஏனைய படையினரிடம் பணத்தை பெற்றுக்கொண்டேன். பணத்தை திரும்ப செலுத்த முடியாததால், முதலில் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்தேன்.
எனினும் நான் தற்கொலை செய்துக்கொண்ட விமானப்படையிடம் இருந்து எனது மனைவிக்கு கிடைக்க வேண்டிய கொடுப்பனவுகள் கிடைக்காது. இதன் காரணமாக இந்த திட்டத்தை செயற்படுத்தினேன் எனக் கூறியுள்ளார்.
விமானப்படை கோப்ரலை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் நாளைய தினம் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவத்திற்கும் விமானப்படைக்கும் தொடர்பில்லை
இந்த சம்பவத்திற்கும் விமானப்படைக்கோ, வேறு தரப்பினருக்கோ தொடர்பில்லை. முழு செயலும் கோப்ரலால், அவரது விருப்பத்திற்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மூலம் விமானப்படையின் நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்காக கோப்ரலுக்கு எதிராக விமானப்படையின் சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் பொலிஸார் அவருக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.