யாழ். மாநகர சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
யாழ்ப்பாணம் மாநகர சபை, குப்பைகளை எரிப்பதைத் தவிர்த்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் மூலம் காற்று மாசுபாட்டைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மருத்துவர் உமாசுகி நடராஜா, யாழ்ப்பாணத்தின் காற்றின் தரம் தொடர்பான கரிசனைகள் அடங்கிய ரிட் மனுவொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார்.
மனு தாக்கல்
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் கே. பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய இரண்டு நீதியரசர்கள் கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
முன்னதாக யாழ்ப்பாணப் பகுதியில் காற்றின் தரத்தை மதிப்பிட்டு அதன் அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மத்திய சுற்றாடல் அதிகாரசபை தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் திருப்திகரமான மட்டத்தில் இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த விடயங்களை கருத்திற் கொண்டு நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியிருந்தது.



