ஜெர்மனி, அமெரிக்கா, கனடாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பார்சலில் சிக்கிய பொருட்கள்
சீதுவையில் உள்ள ஒரு தனியார் களஞ்சியசாலையில் விமான அஞ்சல் மூலம் பெறப்பட்ட சந்தேகத்திற்கிடமான பார்சலில் 31 கோடி 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழு இன்று மதியம் மேற்கொண்ட நடவடிக்கையின் போது போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்களில் 23,642 போதை மாத்திரைகள், 01.445 கிலோகிராம் கொக்கைன், 993 கிராம் மெத்தம்பேட்டமைன் மற்றும் 98 கிராம் ஐஸ் ஆகியவை அடங்கும்.
போதைப்பொருள்
இவை ஜெர்மனி, செக் குடியரசு, சாம்பியா, அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து கொழும்பு, பாணந்துறை, வத்தளை, இராஜகிரிய மற்றும் மொரட்டுவ ஆகிய இடங்களில் உள்ள போலி முகவரிகளுக்கு அனுப்பப்பட்டன.
உரிய பார்சல்களைப் பெற யாரும் வராததால், விசாரணையின் போது அதில் பதிவிடப்பட்டிருந்த அனைத்து முகவரிகளும் போலியானவை என்பது தெரியவந்துள்ளது.
இந்த போதைப்பொருள் கையிருப்பை மேலும் விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



