ஏர் கனடா தலைமை நிர்வாக அதிகாரி அதிரடி ஓய்வு - பிரெஞ்சு மொழியில் பேசாததே காரணமா..!
ஏர் கனடா (Air Canada) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் ரூசோ (Michael Rousseau), இந்த ஆண்டின் இறுதிக்குள் தனது பதவியிலிருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் நியூ யோர்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த இரண்டு விமானிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் காணொளியில், அவர் பிரெஞ்சு மொழியில் பேசத் தவறியதே இந்தத் திடீர் முடிவுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
மொழிப் பிரச்சினை
கனடாவின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றான பிரெஞ்சு மொழியைச் சரளமாகப் பேசத் தெரியாத ரூசோ, உயிரிழந்தவர்களில் ஒருவரான கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த அண்டோயின் ஃபாரெஸ்டின் குடும்பத்தினருக்கு ஆங்கிலத்தில் மட்டுமே இரங்கல் தெரிவித்திருந்தார்.

இது கனடிய அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்த கனடியப் பிரதமர் மார்க் கார்னி, ரூசோவின் செயல் "இரக்கமற்றது" என்று விமர்சித்தார்.
அதேபோல், கியூபெக் மாகாண முதல்வர் பிரான்சுவா லெகால்ட், பிரெஞ்சு மொழி பேசத் தெரியாத ஒருவர் அந்தப் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் எனச் சாடினார்.
பல ஆண்டுகளாகப் பிரெஞ்சு மொழிப் பாடங்களைக் கற்று வந்த போதிலும், தம்மால் அந்த மொழியில் போதுமான அளவு கருத்துக்களை வெளிப்படுத்த முடியவில்லை என ரூசோ வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோரினார்.
அதிரடி ஓய்வு
ஏற்கனவே 2021ஆம் ஆண்டு தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்ற போதே அவரது மொழித் திறன் குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் அவரைப் பதவி விலகும் நிலைக்குத் தள்ளியுள்ளது.

மாண்ட்ரியலைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஏர் கனடா நிறுவனம், 1988இல் தனியார் மயமாக்கப்பட்ட போதிலும், கனடாவின் 'அதிகாரப்பூர்வ மொழிச் சட்டத்திற்கு' (Official Languages Act) உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரு தசாப்தங்களாக நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பங்காற்றிய ரூசோ, எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதியில் தனது பதவியிலிருந்து விலகுவார் என ஏர் கனடா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த இடைப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் தலைமை மாற்றத்திற்கான பணிகளில் அவர் ஒத்துழைப்பு வழங்குவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
மொழி உணர்வு மற்றும் கலாச்சார மதிப்பீடுகளுக்கு மதிப்பளிக்கத் தவறிய ஒரு தலைமை அதிகாரி, பொதுமக்களின் அழுத்தத்தால் பதவி விலகும் இந்தச் சம்பவம் கார்ப்பரேட் உலகில் ஒரு முக்கியப் பாடமாகப் பார்க்கப்படுகிறது.
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam