அஹுங்கல்லை துப்பாக்கி சூடு சம்பவம்: பொலிஸார் வெளியிட்ட தகவல்
காலி(Galle) - அஹுங்கல்லை துப்பாக்கிச் சூடு சம்பவமானது முன்விரோதம் காரணமாக பாதாள உலகக்கும்பல் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு குறித்த துப்பாக்கிச்சூடு அஹுங்கல்லை பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். தற்போது துபாயில் தலைமறைவாக இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் பிரபல பாதாள உலகப்புள்ளியான "பபா" என்பவனின் தகப்பனாரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தற்போது அறியக் கிடைத்துள்ளது.
பொலிஸார் சந்தேகம்
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள், உயிரிழந்த நபரின் தலைப்பகுதியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர்.
தலையில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 14ம் திகதி மதூஷ என்பவரின் மகளை திருமணம் செய்து கொள்ள இருந்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொலை செய்த சம்பவத்துக்குப் பழிவாங்கும் வகையிலேயே "பபா"வின் தகப்பனார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |