அரசின் விவசாயிகளுக்கான உர மானிய திட்டத்தில் குறைபாடு: விவசாய அமைச்சு குற்றஞ்சாட்டு
இம்முறை விவசாயப் பருவத்தில் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க முன்மொழியப்பட்டுள்ள திட்டத்தில் குறைபாடு இருப்பதாக விவசாய அமைச்சு ஜனாதிபதி அலுவலகத்துக்கு அறிவித்துள்ளது.
உர மானியமாக ஒரு ஹெக்டேயருக்கு 20,000 ரூபாய், இரண்டு ஹெக்டேருக்கு 40,000 ரூபாய் என்ற அடிப்படையில் 10 ஆயிரம் கோடி ரூபாவை வழங்க அசாங்கம் திட்டமிட்டிருந்தது.
இதற்கமைய 31,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு இரண்டு நிறுவனங்களுக்கு ஏற்கனவே ஒப்பந்தப்புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.
விவசாய அமைச்சு
கடந்த பயிர்ச்செய்கை காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 34,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் இன்னும் இருப்பில் உள்ளது.
அத்துடன் 15,000 மெட்ரிக் தொன் யூரியாவை மேலதிகமாக இறக்குமதி செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் மானியத்துக்கான நிதியை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பதற்கான திட்டம் இருந்தபோதிலும், அந்த நிதி விடுவிக்கப்பட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டதா என்பதை சரிபார்க்க எந்த வழிமுறையும் இல்லை என்று அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தகைய சரிபார்ப்பு செயல்முறை இல்லாத நிலையில், விவசாயிகள் மானியம் வழங்கப்பட்ட நோக்கத்திற்குப் பதிலாக அன்றாட முன்னுரிமைகளுக்குப்
பயன்படுத்துவதைத் தடுக்க எதுவும் இல்லை என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.