தனியார் கடனளிப்பவர்களுடன் இந்த வாரத்தில் உடன்படிக்கை - ஜனாதிபதி ரணில் அறிவிப்பு
இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக தனியார் பத்திரதாரர்களுடன் கலந்துரையாடல்களை முடித்து, அடுத்த வாரத்தில் உடன்பாட்டை எட்டுவதற்கு இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இன்று மாத்தறையில் நடைபெற்ற “எக்வா ஜெயகமு” ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் என்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
முன்னதாக கடந்த வாரத்தில் இலங்கை இருதரப்பு கடனளிப்பவர்களுடன் கடனை மறுசீரமைத்து உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது.
இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட பின்னர், தனியார் பத்திரதாரர்களின் பிரதிநிதிகளுடனாக பேச்சுவார்த்தைகளும் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாக விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரம்
இப்போது, இரு தரப்பிலும் வெற்றிகரமாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி அடுத்த வாரத்திற்குள் உடன்படிக்கையை எதிர்ப்பார்ப்பதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் உட்பட இந்த வருடத்திலும் அடுத்த வருடத்திலும் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு பகுதியினரும் இணைந்து ‘எக்வா ஜெயகமு’ (ஒன்றிணைந்து வெற்றிப்பெறுவோம்) என்ற தொனிப்பொருளில், ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரத்தை இன்று மாத்தறையில் இருந்து ஆரம்பித்தனர்.
இந்த பிரசாரத்தில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர, அலி சப்ரி, ஹரின் பெர்னாண்டோ, மனுச நாணயக்கார, ரமேஸ் பத்திரன, டக்ளஸ் தேவானந்தா, வடமேல் மாகாண ஆளுநர் லக்ச்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |