புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள்
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நகரப்பகுதியில் வர்த்தக செயற்பாட்டுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருவோர் பற்றிய முறைப்பாடுகளை வர்த்தக சங்கம் கவனத்தில் கொள்ளவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வியாபாரத்தில் பாரிய அசௌகரியங்கள்
வடிகால் புனரமைப்பு நடைபெற்று வரும் நிலையில் பணி முடிந்த இடங்களில் வர்த்தக நிலையத்திற்கும் வீதிக்கும் இடையிலான பகுதியில் மண் நிரவி பாதைகளை செப்பனிட நடவடிக்கைகள் எடுக்க கோரியும் அது பற்றி வர்த்தக சங்கம் கருத்தில் எடுக்காது இருந்துள்ளது.
இதனால் வர்த்தக வியாபாரத்தில் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் தமது நாளாந்த வியாபாரம் பாதிப்படைவதாகவும் வர்த்தகர்கள் சிலரால் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் சவால்களும் தீர்வுகளும் என்ற தொனிப்பொருளில் ஊடகத்துறை கற்றலில் ஈடுபட்டுவரும் மாணவர் ஒருவர் புதுக்குடியிருப்பு நகரப்பகுதி வர்த்தகர்கள் சிலருடன் மேற்கொண்டிருந்த கலந்துரையாடலின் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
நடைபாதை
வர்த்தக நிலையங்களின் முன்னாக பொதுமக்கள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட நடைபாதை வரை தங்கள் வியாபார நிலையங்களை நீட்டிக் கொண்டுள்ள சில வர்த்தகர்களால் அவர்களுக்கு அருகில் உள்ள ஏனைய வர்த்தக நிலையத்தினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் வரத்தக சங்கத்திடம் முறையிட்ட போதும் நடைபாதையினை மறைத்தவாறு வர்த்தக நிலையத்தை நீட்டியிருப்பதை அகற்றி எல்லா வர்த்தக நிலையங்களுக்குமான பொதுவான நடைமுறையை உருவாக்கவில்லை என்ற குற்றச்சாட்டினை உறுதி செய்துகொள்ள முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.
நடைபாதைக்கென பதிக்கப்பட்டுள்ள கற்களை சுட்டிக்காட்டிய வர்த்தக அருகில் உள்ள வர்த்தக நிலையமொன்று அந்த நடைபாதை கற்களிடையே இரும்பு கம்பிகளை நாட்டி கொட்டகை போட்டு பக்கங்களுக்கு திரைச்சீலை போட்டிருந்ததை சுட்டிக்காட்டியிருந்தார்.
இவ்வாறு அவர்கள் செயற்படுவாதால் தன் வர்த்தக நிலையம் வாடிக்கையாளர்களுக்கு இலகுவில் பார்வைக்க கூடியதாக இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கிரவல் நிரப்ப நடவடிக்கை
புதுக்குடியிருப்பு சந்தியில் இருந்து பரந்தன் புதுக்குடியிருப்பு வீதியில் பரந்தன் நோக்கிய திசையில் வலது பக்கத்தில் வடிகால் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
வர்த்தக நிலையங்களுக்கு முன் வடிகால் புனரமைப்புக்காக வெட்டப்பட்ட குழிகளில் வடிகாலமைப்பு பணி முடிந்ததும் கிரவல் போட்டு நிரப்பினாலே வீதிக்கு ஓரமாக உள்ள வர்த்தக நிலையங்களுக்கு செல்ல முடியும்.
இந்த நிலையில் தான் அந்த இடங்களில் கிரவல் நிரப்பபடும் போது பாதை இலகுவான பயணத்திற்கு உதவுவதாக இருக்கும்.
ஆனாலும் இந்த விடயம் பலமுறை சுட்டிக்காட்டப்பட்ட போதும் இதுவரை கவனமெடுக்கப்படவில்லை.
குறிப்பாக, புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம் கூடிய கவனமெடுத்து வர்த்தகர்களின் இயல்பான வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க உதவ வேண்டு எனவும் கோரப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
