9 மாதங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட இளைஞனுக்கு பிணை
இஸ்ரேல் எதிர்ப்பு உள்ளடக்கம் கொண்ட காணொளி ஒன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததற்காக பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்ட 21 வயதான விமான சேவை பயிற்சியாளர் முகம்மட் சுஹெய்ல், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு – கால்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக, இன்று (ஜூலை 15) பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாவனல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சுஹெய்லை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
தெஹிவளை பொலிஸ் நிலைய அதிகாரி அனுராத ஹேரத், நீதிபதியிடம் சட்டமா அதிபரின் பரிந்துரையை சமர்ப்பித்து பிணையில் விடுவிக்க கோரிக்கை விடுத்தார்.
நீதிமன்றம், இப்பரிந்துரையை எடுத்துக்கொண்டதற்கமைய, முகம்மட் சுஹெய்லை பிணையில் விடுவிக்க அதிகாரிகளை உத்தரவிட்டது.
இந்த இளைஞன் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிட்டு வந்த நிலையில் இன்றைய தினம் பிணை வழங்கப்பட்டுள்ளது.