நில குத்தகைகள் கோருவதால் கிளிநொச்சி விவசாயிகள் பாதிப்பு!
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நில குத்தகைகளைக் கோருவதால் அதிகமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக்குளத்தின் கீழ் இம்முறை 13,500 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுப் பயிர் செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விவசாயிகளின் நீர் பங்குகள்
இந்த நிலையில், இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள சிறுபோக செய்கைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகளிலுள்ள குறிப்பிட்ட கமக்கார அமைப்புகள், ஒதுக்கீட்டுப் பிரதேசத்திற்கு வெளியிலுள்ள விவசாயிகளின் நீர் பங்குகளை ஒதுக்கீட்டுப் பிரதேசங்களுக்குள் உள்வாங்குவதில் காலதாமதங்களை ஏற்படுத்தி வருகின்றமை மற்றும் பயிர் செய்கை குழுவின் கூட்டத் தீர்மானங்களுக்கு மாறாக விவசாயிகளிடமிருந்து நில குத்தகைகளைக் கோருதல் என்பவற்றால் கூடுதலான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதாவது இரணை மடுக்குளத்தின் கீழ் உள்ள 21,985 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்செய்கை மேற்கொண்டு வரும் சுமார் 6,495 விவசாயிகளையும் உள்ளடக்கிய வகையிலேயே குளத்தின் நீரின் அளவைக் கொண்டு 13,500 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக செய்கை மேற்கொள்வதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
நடவடிக்கை
இந்தநிலையில், ஒதுக்கீட்டுப் பிரதேசங்கள் தவிர்ந்த பகுதி விவசாயிகள் சிறுபோக பயிர்செய்கை மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் காணிகளை வழங்கி நீர்ப்பங்களை இணைப்பதில் குறிப்பிட்ட பகுதி கமக்கார அமைப்புக்கள் இழுபறிகளை ஏற்படுத்தி வருவதினால் பயிர் செய்கைகளில் கால தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், விவசாயிகளிடமிருந்து நிலக் குத்தகைகளைக் கோரிவருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் விரைவாக நடவடிக்கை எடுத்து
சிறுபோக செய்ய உரிய வகையில் முன்னெடுக்க வழிவகைகளை ஏற்படுத்தி தர வேண்டும்
என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
