நெடுஞ்சாலைகள் அமைச்சர் மின்னணு கட்டணத்திட்ட முறை தொடர்பில் வழங்கியுள்ள ஆலோசனை
அதிவேக நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான மின்னணு கட்டணத் திட்ட (ETC) முற்கொடுப்பனவு அட்டைகளை வாகன உமிழ்வு சோதனை நிலையங்களில் விநியோகிக்க முடியுமா என்பது குறித்து ஆராயுமாறு நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ஆர். டபிள்யு.ஆர்.பிரேமசிரிக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ(Johnston Fernando) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மின்னணு கட்டண முறை தற்போது கொழும்பு-கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் மட்டுமே பயன்படுத்தப்படுவதால், ETC முற்கொடுப்பனவு அட்டைகள் தற்போது சீதுவ, ஜா-எல மற்றும் களனி ஹொரன சந்தியில் உள்ள நெடுஞ்சாலை அலுவலகங்களில் மட்டுமே வழங்கப்படுகின்றன.
எதிர்காலத்தில், கெரவலப்பிட்டி உள்ளக பரிமாற்றம் மற்றும் ஏனைய நெடுஞ்சாலைகளில் உள்ள உள்ளக பரிமாற்றங்களில் மின்னணு கட்டண முறைகள் (ETC) நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் வாகன உமிழ்வு சோதனை நிலையங்களில் முற்கொடுப்பனவு அட்டைகளை எளிதாகப் பெற முடியும்.
தினமும் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவோர் மத்தியில் மின்னணு கட்டண ETC முற்கொடுப்பனவு அட்டைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் நெடுஞ்சாலைகளில் வெளியேறும் வாயில்களுக்கு அருகில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வாய்ப்பாகும்.
தற்போது இலங்கை வங்கி, சம்பத் வங்கி மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகிய வங்கிகளில் மட்டுமே ETC கணக்கில் பணம் வைப்பு செய்ய முடியும்.
எவ்வாறாயினும்,
எதிர்காலத்தில் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஊடாகவும் ETC
கணக்கில் பணம் வைப்புப் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு
பொதுமக்களுக்குத் துரித சேவை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும் என
அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.