சீனாவில் செலுத்தப்படும் 10 இலட்சம் கோவிட் தடுப்பூசிகளுக்கு 119 பேரிடம் பாதகமான விளைவு
தமது நாட்டில் செலுத்தப்படும் 10 இலட்சம் கோவிட் தடுப்பூசிகளுக்கும் 119 பேரிடமே பாதகமான விளைவுகளை கண்டதாக சீனா தெரிவித்துள்ளது.
இது ஏனைய மேற்கத்தைய நாடுகளில் செலுத்தப்படும் கோவிட் தடுப்பூசிகளின் பாதிப்பைக் காட்டிலும் குறைவானது என்று சீனா தெரிவித்துள்ளது.
இதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பித்து கடந்த நான்கரை மாதங்களில் தமது நாட்டில் செலுத்தப்பட்ட 265 மில்லியன் கோவிட் தடுப்பூசிகளில் 31ஆயிரத்து 434 பாதகமான சம்பவங்களே பதிவானதாக சீனாவின் தொற்று நோய் மற்றும் கட்டுப்பாட்டு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதிலும் 17 வீதமானவை அசாதாரண நிகழ்வுகளாகவே இருந்தன. ஏனையவை காய்ச்சல் மற்றும் ஊசி மூலம் ஏற்படும் புண் போன்ற லேசான பக்கவிளைவுகளாகும் என்று சீனாவின் தொற்று நோய் மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
எனினும் சீனாவின் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாக்கம் குறித்த கணப்பீடுகள் மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்து தகவல்கள் வழங்கப்படவில்லை.
ஃபைசர், மொடர்னா மற்றும் எஸ்ட்ராசெனெகா தயாரித்த கோவிட் தடுப்பூசிகளிலிருந்து சோர்வு, தலைவலி,காய்ச்சல் போன்ற தாக்கங்களை தடுப்பூசிக்கு பின்னர் 10 பேரில் ஒருவர் உணர்ந்ததாக பிரித்தானியா ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் சீனாவின் அறிக்கையின் படி அந்த நாட்டில் செலுத்தப்பட்ட ஐந்து
தடுப்பூசிகளில் இரண்டு தடுப்பூசிகள் சினோர்பார்ம் மற்றும் சினோவாக் பயோடென்
என்ற நிறுவனத்தின் தயாரிப்புக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.