சாய்ந்தமருது பகுதியில் தேங்காய் எண்ணெய்யில் கலப்படம்: நீதிமன்ற உத்தரவு!
கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளில் தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்த குற்றச்சாட்டில் வியாபார நிலைய உரிமையாளர்கள் 05 பேருக்கு தலா 1 இலட்சம் ரூபா சரீரப்பிணை வழங்கப்பட்டுள்ளது.
கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் உணவிற்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வியாபார நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நேற்றுமுன்தினம் (02.04.2026) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எண்ணெய் கலப்படம்
இதன்போது, ஒவ்வொரு வர்த்தகருக்கும் தலா 1 இலட்சம் ரூபா சரீரப்பிணை வழங்கப்பட்டதுடன், தண்டனை மற்றும் அபராதம் குறித்து அறிவிப்பதற்காக வழக்கு எதிர்வரும் மே மாதம் 1 மற்றும் 7 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு சோதனையின் போது, கல்முனை பகுதியில் உள்ள மூன்று வியாபார நிலையங்களிலும் சாய்ந்தமருது பகுதியில் உள்ள இரண்டு வியாபார நிலையங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வந்த தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குறித்த தேங்காய் எண்ணெய் மாதிரிகள் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி பரிசோதிக்கப்பட்டபோது, அவற்றில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட வியாபார நிலையங்களுக்கு எதிராக அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, கல்முனை மற்றும் அம்பாறை பகுதிகளில் குடிநீர் பாட்டில்களை அதிக விலைக்கு விற்ற வர்த்தகர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபா அபராதம் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.