சுதந்திரக் கட்சியின் தலைமை விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்சவையும்(Wijeyadasa Rajapakshe)பதில் செயலாளர் நாயகமாக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தமை சட்டவிரோதமானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனு மீதான மேன்முறையீடுகள் மூன்றாவது நாளாகவும் ஆராயப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவினால்(Duminda Dissanayake) கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவை நிராகரித்து உத்தரவு ஒன்றை வெளியிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு இன்று மேல்மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மனு ஒத்திவைப்பு
இதன்படி மனு, கிஹான் குலதுங்க மற்றும் பிரேங்க் குணவர்தன ஆகியோர் அடங்கிய சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் மீண்டும் அழைக்கப்பட்டது.
இதன்போது, பிரதிவாதி துமிந்த திஸாநாயக்க சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர மேலதிக சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
இதையடுத்து, மேலதிக சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக எதிர்வரும் 31ம் திகதிக்கு மனு ஒத்திவைக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |