மர்மமான முறையில் உயிரிழந்த விதுஷனின் வழக்கு ஒத்திவைப்பு(VIDEO)
மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மறுநாள் சடலமாக மீட்கப்பட்ட விதுஷனின் வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 3ஆம் திகதி ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நிலையில் மறுநாள் காலை விதுசன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
விதுஷனின் மர்மமான உயிரிழப்பு தொடர்பாக குடும்ப உறவினர்களினால் பல சந்தேகங்கள் இருப்பதாகக் கூறப்பட்டிருந்த நிலையில் விதுசனின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு நிபுணத்துவம் வாய்ந்த பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் முன்பாக இரண்டாவது உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கடந்த யூன் 21ம் திகதி நீதிமன்ற உத்தரவின் கீழ் விசாரணைகள் ஆரம்பமானது.
குறித்த வழக்கு விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி றிஸ்வான் முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
இன்றைய தினம் பேராதனை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட விதுசனின் உடலத்தின் உடல் பாகங்களின் அறிக்கை தாமதமாகின்ற காரணத்தினால் மன்றுக்குத் தொலைநகல் மூலம் அறிவிக்கப்பட்டு இருப்பதனால், குறித்த வழக்கு விசாரணை இம் மாதம் 27ஆம் திகதி மன்றுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வழக்கு விசாரணையின் போது விதுஷனின் உடலில் 31 வகையான காயங்கள் இருப்பதாக
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உடற்கூறு பரிசோதனை அறிக்கை மன்றுக்குச்
சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகச் சிரேஷ்ட சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


