கல்வியற் கல்லூரிகளில் மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு: ஷஃபி எச்.இஸ்மாயில் வெளியிட்ட தகவல்
கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வியற் கல்லூரிகளில் இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக நீதிக்கான மய்யம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
கல்வியற் கல்லூரிகளில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் பாடத்திற்கு மாணவர்களை உள்ளீர்ப்பதில் கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிக்கான மய்யம் மேற்கொண்ட சட்ட நடவடிக்கை தொடர்பாக இன்று (11.05.2023) ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வியற் கல்லூரிகளில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் பாடத்திற்கு மாணவர்களை உள்ளீர்ப்பதில் கிறிஸ்தவ முஸ்லிம் மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிக்கான மய்யம் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையினால் கல்வி அமைச்சு தீர்வினை தற்போது வழங்கியுள்ளது.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழு
இவ்விடயம் தொடர்பில் நீதிக்கான மய்யம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் கடந்த 08.02.2023 ஆம் திகதி முறைப்பாடொன்றினை பதிவு செய்திருந்தனர்.
கடந்த பல வருடங்களாக கிறிஸ்தவ இந்து , இஸ்லாம் சமய பாடநெறிகளுக்கு கல்வியற் கல்லூரிகளுக்கு சமமான எண்ணிக்கை கொண்ட மாணவர்கள் உள்ளீர்க்கப்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டில் தமிழ் மொழி மூலமாக இந்து கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் பாட நெறிகளுக்கு கல்வியற் கல்லூரிகளில் 30 மாணவர்கள் உள்ளீர்ப்பு செய்யப்பட்டனர்.
2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளிலும் மூன்று பாடநெறிகளுக்கு சமமானவர்கள் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
2022 ஆம் ஆண்டு கல்வியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்வாங்கும்போது இந்து சமய பாடத்திற்கு 40 மாணவர்களையும், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ பாடநெறிகளுக்கு தலா 20 மாணவர்களை மாத்திரம் உள்வாங்க இருப்பதாக வர்த்தமானியில் கல்வி அமைச்சு அறிவித்தல் வழங்கியுள்ளது.
கல்வி அமைச்சு
இந்த வர்த்தமானியை ரத்து செய்து இஸ்லாம் கிறிஸ்தவ பாடநெறிகளுக்கு மாணவர்களை கூடுதலாக உள்வாங்குமாறு மனித உரிமை ஆணைக்குழுவில் நீதிக்கான மய்யம் முறைப்பாடொன்றினை பதிவு செய்திருந்தது.
மேலும் இம்முறைப்பாட்டினை ஏற்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக கல்வி அமைச்சு குறித்த இரு பாடநெறிகளுக்கும் கூடுதல் மாணவர்களை உள்ளீர்ப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக நீதிக்கான மய்யத்திற்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான தகவல்கள் உள்ளடக்கி வருகின்றது பின்வரும் காணொளி,