பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட நடிகை மற்றும் அவரது கணவனை கைது செய்ய முடியாமல் திணறும் பொலிஸார்
30 லட்சம் ரூபா மோசடி தொடர்பில் நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் லென்லி ஜோன்சன் ஆகியோரை கைது செய்ய முடியாமல் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திணறுவதாக தெரியவந்துள்ளது.
6 நாட்களுக்கு முன்னர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொரலஸ்கமுவவில் உள்ள தமிதா அபேரத்னவின் வீட்டிற்கு சென்றிருந்த போதிலும், இருவரும் ஏற்கனவே வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரியாவுக்கு அனுப்புவதாகக் கூறி 30 இலட்சம் ரூபாவை ஏமாற்றியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விசேட பொலிஸ் குழு
தமித அபேரத்ன தம்பதியினரின் நிலுவையில் இருந்த பிணை விண்ணப்பத்தை கடந்த 27ஆம் திகதி நீதவான் திலின கமகே நிராகரித்தார்.
அதற்கமைய சந்தேக நபர்களை கைது செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட பொலிஸ் குழு பொரலஸ்கமுவ பபிலியான இல்லத்திற்குச் சென்றது. ஆனால் இருவரும் வீட்டில் இல்லை. தமிதா அபேரத்னவின் தாய் மட்டுமே வீட்டில் இருந்தார்.
எவ்வாறாயினும், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அன்றைய தினம் இரவு முதல் மறுநாள் பிற்பகல் வரை அவரது வீட்டிற்கு அருகில் தங்கியிருந்த போதும் ஏமாற்றத்துடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு திரும்பியதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.