அபகரிக்கப்படும் தமிழர் காணிகள்! மக்கள் பிரதிநிதிகள் அசமந்தம் - மக்கள் அமைப்பின் பிரதிநிதி
அண்மைய நாட்களாக தமிழர் பகுதகளில் பாதுகாப்புத் தரப்பினால் பொது மக்களுடைய காணிகள் அபகரிக்கும் செயற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ள இந்நிலையில் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் அசமந்தமாக உள்ளதென காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் பிரதிநிதி இன்பம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யுத்தம் முடிந்த பின்னரும் இராணுவத்தினர் ஆக்கிரமித்த நிலங்களை விடுவிக்கவில்லை. இது ஒரு பாதுகாப்பு தரப்பினரின் செயற்பாடு என்பதைத் தாண்டி அரசு நிர்வாகங்கள் அனைத்துமே இதற்கு துணைபோவதாகவே காணப்படுகிறது.
அரசாங்க அதிபர் மற்றும் ஆளுநரும் இந்த காணி சுவீகரிப்புக்கு துணைபோகின்றனர் என்பதே எமது வெளிப்படையான கருத்து.
இதற்கு பொது அமைப்புக்கள் என்ற வகையில் நாங்கள் எதிர்ப்பையும், கண்டனங்களையும் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்ற வகையில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற சூழ்நிலையில் எங்களுடைய அரசியல் தலைமைகளோ இதனை தடுத்து நிறுத்தக்கூடிய விடயங்களையும், சவால் கொடுக்கக்கூடிய விடயங்களையும் செய்யவில்லை என்பதே உண்மை. இது எமக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
படையினர் அச்சுறுத்தி உறுதிப்பத்திரங்கள் இருக்கின்ற மக்களின் காணிகளையும் சுவீகரிக்கின்ற நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படியான ஒரு சூழ்நிலையில் தமிழ் தலைமைகள் அசமந்தப் போக்கில் இருப்பதென்பது தமிழ் மக்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
நாடாளுமன்றத்திலும், சர்வதேசம் சார்ந்த மனித உரிமைத் தளங்களிலும் இந்த விடயங்கள் பேசுபொருள் ஆக்கப்படவில்லை. இவை படையினருக்கு வாய்ப்பாகவே அமைகின்றது என தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட இரட்ணசிங்கம் முரளீதரன் கருத்து தெரிவிக்கையில்,
மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் கரையோர பகுதிகளில் மக்களின் காணிகளை கடற்படையினர், இராணுவத்தினர் கைப்பற்றுவதற்கு அரசு அதிகாரிகள் துணை போகின்றனர் என தெரிவித்துள்ளார்.
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri