தமிழர்களின் விவசாயத்துறையை அச்சுறுத்தும் செயற்பாடுகள்: சமூக ஆர்வலர்கள் விசனம்
சாடிகளில் நீர்த்தாவரங்களை வளர்க்கும் மக்களின் இயல்பு தொடர்பில் சமூக ஆர்வலர்கள் விசனப்பட்டு வருகின்றனர்.
வீடுகளிலும் வியாபார நிலையங்களிலும் நீர்க்களைகளை அழகுத்தாவரங்களாக வளர்ந்துவரும் செயற்பாடு விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலான விடயமாக மாறிப்போகும் அபாயம் இருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
சாடிகளில் வளர்க்கப்படும் நீர்த் தாவரங்கள் நீர் நிலைகளை அடையும் போது அவை அங்கு ஆக்கிரமிப்பு களைகளாக பரவிக் கொள்வதால் விவசாய நிலங்களில் நீருடன் புகுந்து கொண்டு பயிர்ச்செய்கைக்கு இடையூறாக அமைந்து விடுகின்றது.
நாமே பரப்பி நம் நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்ய விட்டுவிட்டு அதன் பின்னர் அவற்றை அழித்தொழிக்கப் போராடுவது முட்டாள்தனமான செயற்பாடாக அமையும்.
நீர்க் களைகள்
நீர்க் களைகள் என்பது நீர் நிலைகளில் நன்றாக வளரக்கூடிய தாவரங்கள் ஆகும். நீர்நிலைகளில் நீரில் மிதந்தவாறு வாழும் இவை நீரின் காற்றடிப்புத் திசையில் அசையக்கூடியவை.
நீரோட்டங்களின் ஊடாக இடம்விட்டுச் சென்று பரவிக் கொள்ளக்கூடிய ஆற்றலைக் கொண்டவை. ஆசிய நாடுகளில் பரவி வாழும் பொதுவான நீர் தாவரங்கள் நீர்களைகளாகவே விவசாயத்துறையினரால் நோக்கப்படுகின்றது.
இத்தகைய நீர்க் களைகளாக அமையும் தாவரங்கள் ஆக்கிரமிப்பு இயல்பை வெளிக்காட்டுகின்றது.
தம் உற்றபத்தித் தாயகத்தை விட்டு வெளி இடமொன்றில் பரவும் அதிகமான அங்கிகள் அங்கு ஆக்கிரமிப்பு இனமாக மாறிவிடுவதனை அவதானிக்க முடிகின்றது.
தொட்டாச்சுருங்கி, நாயுண்ணி, பார்த்தீனியம், போன்ற தரை வாழ் தாவரங்களும் ஆக்கிரமிப்பு இனங்களாகவே இனம் காணப்படுகின்றன.
நீர்வாழ் தாவரங்களான சல்வீனியா,ஆகாயத்தாமரை,நீர் வாழை, சேம்பு, பிரம்பு போன்றவையும் ஆக்கிரமிப்புத் தாவரங்களாகவே அமைந்துவிடுகின்றன.
தாம் வாழும் சூழலில் உய்ரிப்பல்வகையை பெரியளவில் பாதித்து விடுபவையாக ஆக்கிரமிப்பு இனங்கள் இருப்பதாக உயிரியல் பாடத்துறை ஆசிரியர் நீர்த் தாவரம் குறித்து விளக்கியிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
சல்வீனியாவின் தாக்கம்
நந்திக்கடலின் மஞ்சள் பாலத்திற்கு அண்மையில் உள்ள வயல் நிலங்களிலும் முல்லைத்தீவு நகரின் நந்திக்கடலோரமாகவுள்ள வயல் நிலங்களில் மாரி காலத்தில் மேற்கொள்ளப்படும் பெரும் போக நெற்செய்கையின் போது சல்வீனியாவின் தாக்கம் அதிகமாக இருப்பது ஒவ்வொரு ஆண்டும் அவதானிக்கப்பட்டு வருவது வழக்கம்.
வன்னியின் நீர்நிலைகளில் அதிகளவான நீர்க்களைகளின் பரம்பல் அவதானிக்கப்பட்ட போதும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கென பொருத்தமான முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை.
சல்வீனியாவை கட்டுப்படுத்து பௌதீக பொறிமுறை மற்றும் உயிரியல் முறை,இரசாயன களைக்கொல்லிகளைப் பயன்படுத்தல் என பல வழிமுறைகள் விவசாயத்திணைகளங்களால் பரிந்துரைக்கப்பட்டு இருந்த போதும் அவை நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வெற்றியிலக்கை இன்னும் அடையவில்லை என்பது நோக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஆகாயத்தாமரை
இத்தகைய சூழலில் வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களில் அழகுத்தாவரமாக ஆகாயத்தாமரை என்ற நீர்களையினை வளர்ந்துவரும் மக்களின் செயற்பாடுகள் கவலையளிப்பதாக இருக்கிறது.
இந்த நீர்க் களைகள் நீர்நிலைகளை அடையும் போது அங்கே வேகமாக பரவி வளர்ந்து ஆக்கிரமிப்பு இயல்பினை காட்டுகின்றன.
நீர்க் களைகள் தொடர்பாக மக்களிடேயை விழிப்புணர்வு அவசியம்.விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பொருத்தமான முயற்சிப்புக்கள் போதியளவில் இல்லை என அவர்கள் துறைசார் அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
ஆகாயத்தாமரையும் சல்வீனியாவும் நீர்நீலைகளில் விரைவாக பரவி நீருக்கடியில் ஊடுருவிச் செல்லும் ஒளியினளவை குறைத்துவிடும் என்பது அவதானிப்பாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சேம்பின் ஆதிக்கம்
மக்களால் நீர் வாழை என விழிக்கப்படும் சேம்புத்தாவரம் வீடுகளில் அழகுத்தாவரமாக வளர்க்கப்பட்டு வந்தமையின் விளைவாக வீதியோர வாய்க்கால்களில் அவை பெரியளவில் பரவி வடிகால் வழியே கழிவு நீர் மற்றும் வெள்ள நீர் பாய்ந்தோடுவதில் இடையூறுகளை ஏற்படுத்தி விடுகின்றன.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் முயற்சியினால் கடந்த ஆண்டு மாரிமழையின் போது ஏற்படும் வெள்ளத்தினைத் தடுக்கும் பொருட்டு புதுக்குடியிருப்பு சந்தியில் இருந்து இரணைப்பாலை வரையான வீதியின் வடிகால்களில் வளர்ந்திருந்த சேம்புத்தாவரங்களை அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டு இருந்தது.
புதுக்குடியிருப்பு சந்தியில் இருந்து இரணைப்பாலை சந்தி வரையான வீதியின் வடிகால்களினுள் அதிகளவில் சேர்ப்பு வளர்ந்திருப்பதனை இன்றும் கூட அவதானிக்க முடிகின்றது.
சேம்புத் தாவரங்களை வடிகால் நிலங்களினுள் செல்வதை தடுத்திருப்பதே இந்த வேலை முன்னெடுப்பை தவிர்ப்பதற்கான வழியாக இருக்கும் என புதுக்குடியிருப்பு இரணைப்பாலை வீதியிலுள்ள மக்கள் பலரின் கருத்தாகவும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சேம்புத்தாவரம் விரைவாக வளர்ந்து பெருகி கூட்டமாக வளரக்கூடிய தாவரம் ஆகும்.
சேம்பு உள்ளிட்ட நீரில் நன்றாக வளரக்கூடிய தாவரங்களை பொதுவாகக் நீர் வாழை என மக்களால் அழைக்கப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.
நீர்க் களைகள் தொடர்பில் மக்களிடம் போதியளவான அறிவு இல்லை என்பதும் இதன் மூலம் அறிய முடிகின்றது.
ஊற்றங்கரையில் வியாபித்துள்ள சேம்பு
ஊற்றங்கரை சதுப்புநில பகுதிகளில் சேம்பின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயத்தின் கிழக்குப் பகுதிகளில் ஆரம்பித்து நந்திக்கடல் எல்லை வரை இது தொடர்ந்திருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
சேம்பு மட்டுமல்லாது அதிகளவான நீர்வாழ் தாவரங்களின் பரம்பல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சதுப்புநில பயிர்ச்செய்கையினை ஆண்டின் இரு போகங்களில் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு சேம்புகளாலும் சல்வீனியாவாலும் அதிகளவு சிரமங்கள் இருப்பதனை அவர்கள் சுட்டியிருந்தமையும் இங்கே குறிப்பிடல் பொருத்தமானதாகும்.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பில் துறைசார் நிபுணர்களில் ஒருவரான ஐங்கரநேசனும் தொடர்ந்து நீர்க் களைகளின் தாக்கம் தொடர்பிலும் சாடிகளில் ஆகயத்தாமரை போன்ற நீர்த்தாவர வளர்ப்புத் தொடர்பிலும் தொடர்ந்தும் விழிப்புணர்வுக் கருத்துக்களை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
வசதி படைத்தவராகள்
சாடிகளில் நீரினை நிரப்பி அதனுள் நீர்த்தாவரமான ஆகாயத்தாமரையினை வளர்த்து வரும் இயல்பு தம்மை வசதியானவர்களாக காட்டிக்கொள்ளும் ஒரு முறைமையாக மக்கள் எண்ணிக்கொள்வதனையும் அவதானிக்க முடிகின்றது.
நெடுங்கேணி மற்றும் மல்லாவியின் சில பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை இல்லை.எனினும் அப்பகுதி மக்களில் பலர் ஆகாயத்தமரையை பெற்று வளர்ப்பதில் அதிகளவு ஆர்வத்தோடு இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
நெடுங்கேணியில் தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டுவரும் விவசாயி ஒருவர் குறிப்பிடும் போது "சாடியில் ஆகாயத்தாமரையை வளர்ப்பது நல்லது.வீட்டிற்கு ஆரோக்கியமான சூழலைத் தரும்" என குறிப்பிட்டிருந்தார்.
விவசாயிகளுக்கும் நீர்க் களைகள் தொடர்பான போதியளவு அறிவின்மை இருப்பதனை அவருடனான தொடர் உரையாடல் மூலம் அறிய முடிகிறது.
வன்னியிலும் யாழின் சில பகுதிகளிலும் மேற்கொண்டிருந்த நீண்ட கால தேடலின் மூலம் நடுத்தர மற்றும் வசதியான மக்களிடமே அதிகளவில் நீர்களைகளை சாடிகளில் பயிரிடும் ஆர்வம் இருப்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.
வரும் முன் காப்பதே சிறந்தது
வரும் முன்னே காப்பதே சிறந்த தற்காப்பு முறையாகும்.நீர் தாவரங்களை நாட்டின் எல்லா இடங்களிலும் பரவ விட்டபின் அவற்றை ஒழிப்பதற்கென விசேட செயற்பாடுகளை முன்னெடுப்பது வீண் முயற்சியாகவே இருக்கும்.
பார்த்தீனியத்தினை பரவ விட்ட பின்னர் அதனை அழிப்பதற்கென செயற்திட்டங்களை முன்மொழிவதும் நிதியை ஒதுக்கீடு செய்வதும் ஒருபக்கமிருக்க விவசாயிகள் தொடர்ந்து பார்த்தீனியத்தினால் பாதிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை இந்திய ஒப்பந்தம் 1987 இல் மேற்கொள்ளப்பட்டு இலங்கை வந்திருந்த இந்திய இராணுவத்தினூடாகவே பார்த்தீனியம் இலங்கைக்குள் நுழைந்தது.வடக்கில் இவை திட்டமிட்ட முறையில் ஈழத்தமிழரின் விவசாயத்தினை சீர்குலைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சியாகவே இன்றளவும் பார்த்தீனியத்தின் பரவல் நோக்கப்படுவதாக வரலாற்றுத்துறை ஆசிரிய சுட்டிக் காட்டுவதும் குறிப்பிடத்தக்கது.
இன்றளவும் அதன் துயரை நம் நாட்டு விவசாயிகள் அனுபவித்து வருகின்றனர்.
இத்தகையதொரு முயற்சி போலவே ஆக்கிரமிப்பு நீர்க்களைகளை அழகுத்தாவரமாக வளர்க்கும் இயல்பினை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியுள்ளது.
வரும் முன் சிந்தித்துச் செயற்படுவதே வாழ்வின் சவால்களை இலகுவாக எதிர்கொள்ள உதவும் என்பது நோக்கத்தக்க நல்ல விடயமாகும்.
தமிழர்களின் விவசாயம்
ஈழத் தமிழர்களின் விவசாயம் என்பது அவர்களது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கின்றது என்றால் அது மிகையில்லை என விவசாயத்துறைசார் அறிஞர்கள் பலர் முன்வைக்கும் கூற்றாக இருக்கிறது.
ஈழப்போராட்டத்தின் போது போராட்ட முனைப்பினை தடுப்பதில் விவசாய முயற்சிகளுக்கு எதிராகவும் இலங்கையின் அரசு இயந்திரம் தொழிற்பட்டது எனவும் ஈழ ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் .
ஒதியமலை மற்றும் அதனையண்டிய தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை கையகப்படுத்தி சிங்களக் குடியேற்றத்தினை முன்னெடுத்திருந்ததோடு தமிழர்களின் பெரும் பண்ணை நிலங்களை புல்லுக்காடுகளாக மாற்றி அவற்றில் பல இன்றும் அவ்வாறே இருப்பதனை அவர்கள் சுட்டியிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வன்னியின் நீர்நிலைகளில் காணமுடியாத நீர்க்களைகளை இப்போது அவதானிக்க முடிக்கின்றது.
விடுதலைப்புலிகளின் காலத்தில் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த நிலங்களில் அவதானிக்கப்படாத பார்த்தீனியம் இன்று நெடுங்கேணி, வவுனியா, ஒட்டுசுட்டான் மற்றும் A9 பாதையின் அயலிலுள்ள இடங்கள், யாழ் மாவட்டத்தின் பெரும்பகுதிகளில் பரவியிருப்பதனை சுட்டிக் காட்டலாம்.
இன்றும் கூட முல்லைத்தீவின் பல இடங்களிலும் பார்த்தீனியம் இல்லை என்பதும் சம நேரத்தில் நோக்க வேணடிய விடயம்.
இவ் அவதானத்தின் மூலம் ஈழத்தமிழர்களின் விவசாயத்தினை பாதிக்கும் செயற்பாடுகள் இலைமறைகாயாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவா என்ற சந்தேகமும் எழுவதைத் தவிர்க்க முடியாது.
இந்த சந்தேகம் மெய்ப்படுமாயின் தொட்டிலை ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளி விடும் கைங்கரியத்தினை இலங்கை அரசாங்கம் செய்கின்றதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது.
ஈழத்தமிழர் தொடர்பில் அக்கறைகாட்டுவோர் இது தொடர்பிலும் கவனமெடுப்பது அவசியமாகும்.