மன்னார் தீவுப் பகுதியில் மக்களை பாதிக்கும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்த கோரிக்கை
மன்னார் தீவு பகுதியில் மக்களை பாதிக்கும் வகையில் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகள் மக்களின் எதிர்ப்பையும் மீறி இரகசியமாக இடம்பெற்று வருகின்றது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (07.03.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
அத்துமீறிய வருகை
“இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகையின் காரணமாக கடல் வளம் சுரண்டப்படுவதினால் எமது கடற்றொழிலாளர்கள் வாழ முடியாத நிலை காணப்படுகிறது.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நாங்கள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்த போதும் இதற்கு எவ்வித முடிவும் கிடைக்காத நிலை காணப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாங்கள் முன்னின்று குரல் கொடுத்து வருகிறோம்.
எனினும், இலங்கை கடற்பரப்பினுள் ஆயிரக்கணக்கான இந்திய இழுவைப்படகுகள் வந்து கடல் வளங்களை அழிப்பதோடு, கடற்றொழிலாளர்களின் சொத்துக்களும் அழிக்கப்படுகின்றது.
இதனால் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய நடவடிக்கை இடம்பெறுகின்றது.
மக்களின் எதிர்ப்பு
மன்னார் தீவை பாதுகாக்க மன்னார் மாவட்ட மக்கள் எம்முடன் கைகோர்த்துள்ளனர். வளம் நிறைந்த மன்னார் மண்ணை வளமற்ற நிலமாக மாற்ற அந்நிய சக்திகள் முயற்சிக்கின்றது.
மேலும். கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகள் மக்களின் எதிர்ப்பையும் மீறி இரகசியமாக இடம்பெற்று வருகின்றது.
எனவே, மக்களை பாதிக்கும் குறித்த நடவடிக்கைகள் மன்னார் தீவு பகுதியில் முற்றாக
நிறுத்தப்பட வேண்டும்” எனவும் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |