ஒலுவில் துறைமுகத்தை மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை: டக்ளஸ் (Photos)
அம்பாறை - ஒலுவில் துறைமுகத்தினை மீள இயக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைக்காரியாலயம், நேற்றைய தினம் (08.04.2023) மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சிவானந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டுள்ளார்.
அச்சம் கொள்ளத்தேவையில்லை
இதன்போது தலைமைக்காரியாலயம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கட்சி ஆதரவாளர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது. ‘பயங்கரவாத தடைச்சட்டமானது கடந்த காலத்தில் தமிழ் மக்கள் முன்னெடுத்த போராட்டங்களை முடக்குவதற்குக் கொண்டுவரப்பட்டது.
ஆனால், இன்று அந்த நிலைமையில்லை. அதன் காரணமாக இந்த சட்டம் தொடர்பில் யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மைக்குச் சட்டங்கள் அவசியமாகும். இதனை அமெரிக்கா உட்படப் பல நாடுகள் கைக்கொண்டுள்ளன.
நாங்கள் நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடக்கும்போது இவ்வாறான சட்டங்கள் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை துறைமுகத்தினை விஸ்தரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
[
பல்வேறு விதமான வளர்ச்சி
இதேபோன்று ஒலுவில் துறைமுகம் மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஒலுவில் துறைமுகம் திறக்கப்படுமானால் வாழைச்சேனையில் தரிக்கப்படும் அம்பாறை மாவட்ட படகுகள் வராது.
அதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்னும் அதிகளவான படகுகளை தரிக்கமுடியும். தற்போதுதான் நாடு ஓரளவு முன்னேற்றம் அடைந்துவருகின்றது.
ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றதன் பின்னர் பல்வேறு விதமான வளர்ச்சிகளைக்
காணமுடிகின்றது. எனினும் அடுத்த ஆண்டுகள்தான் பாரியளவிலான அபிவிருத்தி
திட்டங்களை முன்னெடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.