அசாத் சாலியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - சரத் வீரசேகர
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். அசாத் சாலி வெளியிட்டுள்ள கருத்து அடிப்படைவாதம் சம்பந்தப்பட்டது என்பதால், அவரை கைது செய்து தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அசாத் சாலியை கட்டாயம் கைது செய்ய வேண்டும்.
அவரது கருத்து மத அடிப்படைவாதத்தை அடிப்படையாக கொண்டது. ஷரியா சட்டத்திற்கு அமைய செயற்பட வேண்டுமாயின் அவர் சவுதி அரேபியாவுக்கு செல்ல வேண்டும்.
அவருக்கு இலங்கையில் இருக்க முடியாது. இலங்கையில் இருக்க வேண்டுமாயின் இலங்கையின் சட்டத்திற்கு அமையவே இருக்க வேண்டும். அது மாத்திரமல்ல, அவரை கைது செய்து விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம் என சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.