மூடப்பட்டுள்ள தேசிய கலைக்கூடத்தை திறக்க நடவடிக்கை
பதின்மூன்று வருடங்களாக பூர்த்தி செய்யப்படாமல் மூடப்பட்டுள்ள தேசிய கலைக்கூடத்தை இந்த வருட இறுதிக்குள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்
குறித்த பகுதிகளுக்கான கண்காணிப்பு விஜயத்தை நேற்று (26.03.2024) மேற்கொண்ட நிலையிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
2011ஆம் ஆண்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் கலைக்கூடத்தின் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.
திரையரங்கு நிர்மாணம்
தேசிய கலைக்கூடம் தொடர்பாக கலைஞர்கள் மற்றும் கட்டிடக்கலை நிபுணர்கள் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை செவிமடுத்த ஜனாதிபதி விக்ரமசிங்க, அது தொடர்பில் பொதுவான உடன்பாட்டை எட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு நகருக்கு இன்று தேவைப்படுவது குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய உயர்தர திரையரங்குகளே என தெரிவித்துள்ள ஜனாதிபதி, ஜோன் டி சில்வா திரையரங்கு நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் அவ்வாறு குறைந்த விலைக்கு திரையரங்குகளை வழங்க முடியுமா என வினவியுள்ளார்.
நாடகத்துறைக்காக லும்பினி அரங்கு மற்றும் புதிய அரங்கு புனரமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு தெரிவித்த ஜனாதிபதி, கொழும்பு சுதர்ஷி வளாகத்தில் நாடக அரங்கொன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தாமரைத்தடாகம், தேசிய கலைக்கூடம், ஜோன் டி சில்வா ஞாபகார்த்த அரங்கு, நூதனசாலை மற்றும் அதனுடன் தொடர்புடைய வளாகங்களை இணைத்து தேசிய கலாசார வலயமொன்றை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது தொடர்பான முழுமையான அறிக்கை ஒன்றைத் தயாரிக்குமாறு கலாசார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |