மங்கள சமரவீர மற்றும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்! - பெங்கமுவே நாலக தேரர்
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர செயற்பட்ட விதம் காரணமாகவே ஐ.நா மனித உரிமை பேரவையின் அழுத்தங்களுக்கு உள்ளாக நேரிட்டுள்ளதாக சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.
இதனால், நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராகவும் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் மங்கள சமரவீரவின் செயற்பாடுகள் காரணமாவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர் அமைச்சரவையின் அனுமதியின்றி செயற்பட்டுள்ளார். ஒரு நாடு தமது நாட்டுக்கு எதிராக சர்வதேசத்திற்கு ஆதரவளிக்காது. எனினும் மங்கள சமரவீர அதனை செய்தார்.
அமெரிக்காவையும் புலம்பெயர் தமிழர்களையும் மகிழ்விக்க ஆவணங்களில் கையெழுத்திட்டு இருக்கலாம். மங்கள சமரவீர மற்றும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் யோசனையை தோற்கடிக்க அங்குள்ள இலங்கை தூதுவர்கள் வெளிநாடுகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் தேவைக்கு அமைய செயற்படக் கூடாது.
நாட்டின் பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் முறைப்பாடு செய்ய போய் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளக் கூடாது எனவும் பெங்கமுவே நாலக தேரர் குறிப்பிட்டுள்ளார்.



