போதைப்பொருள் பாவனை மற்றும் சமூக விரோத செயற்பாடுகளை இல்லாதொழிக்கும் நடவடிக்கை (Photos)
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இடம்பெறும் போதைப்பொருள் பாவனை மற்றும் சமூக விரோத செயற்பாடுகளை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளைப் பிரதேச செயலகத்துடன் இணைந்து சமூக அமைப்புக்கள் முன்னெடுக்கும் வகையிலான விழிப்புணர்வு கூட்டம் பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில்,
ஆலையடிவேம்பில் அண்மைக்காலமாக மீண்டும் சட்டவிரோத செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளன. இதனைத் தடுப்பதற்குப் பிரதேச செயலாளர் ஆகிய என்னால் மாத்திரம் முடியாது.
குற்றச்செயலைத் தடுப்பதற்கு நடவடிக்கை
ஆகவேதான் சமூக அமைப்புக்களாகிய உங்களது பங்களிப்பை எதிர்பார்க்கின்றேன். இச்செயற்பாட்டில் அனைவரும் இணைந்து பயணிப்போமால் வெற்றி பெறுவது இலகு. அத்தோடு பிரதேசத்தில் உள்ள 90 வீதமானவர்கள் நல்லவர்களே.
ஆனால் மிகுதியான 10 வீதமானவர்களின் செயற்பாடுகளே பிரதேசத்தை ஒட்டுமொத்தமாகக் குழப்புகின்றது. ஒரு குடம் பாலில் ஒரு துளி விசம் கலப்பதுபோன்றது அவர்களின் செயற்பாடு. ஆகவே அதனை தடுப்பது நமது ஒவ்வொருவரினதும் கடமை. இல்லையேல் நமது சந்ததி நிம்மதியாக வாழ முடியாது.
குற்றச் செயல்களைத் தடுப்பதற்குப் பொறுப்பானவர்கள் நடவடிக்கை எடுக்காவிடின் அதனை உயர் மட்டத்திற்குத் தெரிவிப்போம். குறிப்பாக ஆலயங்களின் நடைபெறும் அசம்பாவிதங்கள் சட்டத்தை மீறி செயற்படுகின்றவர்களை அடையாளப்படுத்துவது நமது கடமை. அவ்வாறு அடையாளப்படுத்தும்போது நடவடிக்கை எடுக்காவிடில் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக மேலதிக நடவடிக்கைக்குச் செல்வோம்.
அத்தோடு பொலிஸாரின் உதவிக்கு மேலதிகமாக இராணுவத்தின் உதவியைப் பெறுவோம்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குற்றத்தைத் தடுப்பதற்கான படிமுறைகள் பற்றியும் இங்கு தெளிவுபடுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பல்வேறு தலைவர்களும் கருத்து வெளியிட்டதுடன் ஒட்டுமொத்தமாக பொலிஸாரின் திருப்தியற்ற நடவடிக்கையே குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்குக் காரணம் என்றனர்.
அத்தோடு பிரதேச செயலாளர் எடுக்கும் நடவடிக்கைக்குத் தாம் எப்போதும் உறுதுணையாக இருப்பதுடன் நீண்ட காலத்தின் பின்னர் துணிச்சலான பிரதேசத்தின் மீது பற்றுடன் செயற்படும் பிரதேச செயலாளருக்கு நன்றி தெரிவித்தனர்.
பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிரதேசத்தில் உள்ள ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புக்கள், விளையாட்டுக்கழகங்கள், சமூக அமைப்புக்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், பெண்கள் அமைப்புக்கள் என பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள் கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் பரிமளவாணி சில்வெஸ்டர் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 14 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
