வவுனியாவில் விவசாயிகளின் உற்பத்திகளை நேரடியாக வீடுகளுக்கு வழங்க நடவடிக்கை
விவசாயிகளின் உற்பத்திகளை நேரடியாக வீடுகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மரக்கறி விற்பனையில் ஈடுபடுபவர்கள் விலையைக் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் வவுனியா மாவட்ட கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் சேதுகாவலர் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய நிலையில் மரக்கறிகளின் விலைகள் தொடர்பான விடயங்களை முன்னிலைப்படுத்தியுள்ளோம். அதன் விலை தொடர்பான பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு புதிய ஒரு செயற்திட்டத்தினை ஏற்படுத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம்.
அந்தவகையில் விவசாயிகளிடம் இருந்து வீடுவரை என்ற செயற்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் மற்றும் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து இதனை முன்னெடுக்கவுள்ளோம்.
இதன் மூலம் விவசாயிகளது உற்பத்தி பொருட்களை நேரடியாக பாவனையாளருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அத்துடன் விற்பனை செய்யப்படும் பொருட்கள் ஆகக்குறைந்த விலையில் கொள்வனவு செய்வதற்கான கட்டுப்பாட்டு விலையினையும் வைத்துள்ளோம்.
அந்தவகையில் விற்பனை முகவர்களூடாக இந்த பொருட்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குபவர்கள் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலங்கங்கள் ஊடாக தொடர்பினை ஏற்படுத்திப் பெறமுடியும். கட்டுப்பாட்டு விலையினை மீறி விற்பனை செயற்பாடு இடம்பெறுவதைக் கண்காணிக்கும் பணியினை கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகதர்கள், கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் மேற்கொள்வார்கள்.
அத்துடன் 5 கிலோவிற்கு மேற்பட்ட மரக்கறிகள் தேவையாக இருந்தால் அதனை வீட்டிற்கே வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.
அத்துடன் வெளிமாவட்டத்தில் இருந்து வருகைதந்து இங்கு வியாபாரம் மேற்கொள்பவர்களிற்கு வழங்கப்பட்டுள்ள வழித்தட அனுமதியானது இங்குள்ள விவசாய உற்பத்தி பொருட்களை வெளிமாவட்டத்திற்கு கொண்டு செல்வதற்காகவே வழங்கப்பட்டுள்ளது.
இதனை மீறுபவர்களின் வழித்தட அனுமதிகள் ரத்து செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் பொலிஸார் ஊடாக முன்னெடுக்கப்படும். எனவே, வெளிமாவட்டங்களில் இருந்து இங்கு மரக்கறிகளைக் கொண்டுவருவதற்கு முன்பு இங்குள்ள மரக்கறிகள் மற்றும் பழங்களை அவர்கள் எடுத்துச்செல்ல வேண்டும்.
குறிப்பாக பப்பாசி, பெசன்புறுட், பூசணி, மரவள்ளி என்பன இங்கு தேங்கியுள்ளது. அதனை வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
புதிதாகத் தயாரிக்கப்பட்ட இவ்வாரத்திற்கான விலைப்பட்டியல் படி கத்தரிக்காய் ஒரு கிலோ 120 ரூபாவிற்கு விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டு 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். வெண்டிக்காய் கொள்விலை 60 விற்பனை விலை 90, கறிமிளகாய் கொள்விலை 120 விற்பனை விலை 180, பயிற்றை கொள்விலை 100 விற்பனை விலை 150, பாவற்காய் கொள்விலை 170 விற்பனை விலை 250, புடோல் கொள்விலை 100, விற்பனை விலை 150, மூட்டை மிளகாய் கொள்விலை 150, விற்பனை விலை 225, பூசணி கொள்விலை 30 விற்பனை விலை 45, மரவள்ளி கொள்விலை 40, விற்பனை விலை 60 ஆகும்.
மேலும், விவசாய பொருட்களை வாகனத்தில் விற்பனை செய்பவர்கள் இவ்வாரத்திற்கான விலைப்பட்டியலைக் காட்சிப்படுத்த வேண்டும். மரக்கறிகள் தேவையானவர்கள் மற்றும் இது தொடர்பான ஏனைய தகவல்களைப் பெற்றுக்கொள்ள 0242229399, 0773030953, 0773065203 ஆகிய இலக்கங்களிற்குத் தொடர்பினை ஏற்படுத்துமாறும் தெரிவித்துள்ளார்.