ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை!
ஜூட் குமார் ஹிசாலினி மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்டவர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரது மாமனார், சிறுமியை பணிக்கு அழைத்துவந்த தரகர் ஆகியோர் கொழும்பு புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இதனிடையே, மற்றும் ஒரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட்டின் மைத்துனரும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய ஜூட் குமார் ஹிசாலினி என்ற 16 வயது சிறுமி அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
தீக்காயங்களுடன், கடந்த 3ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த சிறுமி 12 நாட்களின் பின்னர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரது மாமனார், சிறுமியை பணிக்கு அழைத்துவந்த தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.