திருகோணமலை- பட்டினத்தெரு கடலரிப்பை தடுக்க மாநகர சபையால் துரித நடவடிக்கை ஆரம்பம்
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பட்டணத்தெரு பகுதி அண்மையில் கடலரிப்பு மூலமாக மிகவும் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் ஒன்றும் கடலுக்கடியில் தாழ் இறங்கியுள்ளது.
குறித்த கரையோர பகுதியை சீரமைக்கும் பணி இன்று (14) திருகோணமலை மாநகர சபை, பட்டினத்தெரு மீனவர்கள், இளைஞர்கள் இணைந்து கடலரிப்பில் இருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இவ்வாறான நிலையில் இதனை பார்வையிட இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருகோணமலை மாநகர சபை மேயர் கந்தசாமி செல்வராசா ஆகியோர்களும் களத்துக்கு சென்று புனரமைப்பு பணிகளை அவதானித்ததுடன் இது தொடர்பில் மேலும் உரிய அதிகாரிகளுடன் புனரமைப்பு பணிகளை முழுமையாக பூர்த்தி செய்து தருவதாகவும் அப்பகுதி கடற்றொழிலாளர்களிடத்தில் தெரிவித்தனர்.
மீள் புனரமைப்பு
குறித்த கரையோர மக்களின் கடலரிப்பு பாதிப்பு தொடர்பில் மாநகர சபையின் விசேட சபை அமர்வின் போது பிரேரனைகள் முன்வைக்கப்பட்டன.

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற கால நிலையின் காரணமாக குறித்த பகுதி கடலரிப்பினை எதிர்நோக்கியிருந்ததுடன் கடற்றொழில் குடும்பங்களும் இதனால் கடலுக்கு செல்ல முடியாது பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டனர்.
இந்த நிலையில் கரையோர பகுதி மீள் புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் மாநகர சபை உறுப்பினர் உதய குமார் அஜித் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்..



