சர்வதேச ரீதியில் சாதனை புரிந்த மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு
சர்வதேச ரீதியில் சாதனை புரிந்த சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு மன்/ புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் எஸ்.சந்தியாகு FSC தலைமையில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று (23) காலை மன்னார் பேருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது சாதனையாளர்கள் மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
கௌரவிக்கப்பட்ட மாணவர்கள்
இந்நிகழ்வில் இளையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய மாணவர்களான ஓ.சமிசன் பர்னாந்து, ஏ.பிரைசன், ரி.டனுமிதன், சி.டடிசன் ஆகியோருடன் ஜூனியர் கெமிஸ்ட்ரி ஒலிம்பியாட் (Junior chemistry Olympiad) போட்டியில் சர்வதேச ரீதியாக 80 நாடுகளுடன் போட்டியிட்டு மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்ட மாணவன் எஸ்..அரோன் டியோறி, தேசிய மட்டத்தில் ஆங்கில போட்டியில் கட்டுரை எழுதுதல் போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்ட ஆறாம் தர மாணவன் வி.திவ்யன் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் உதவி மாவட்ட செயலாளர் டிலிசன் பயஸ், மன்னார் வலய கல்வி திணைக்கள உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஜேக்கப், மன்னார் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் பிறின்ஸ் லெம்பேட், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் வின்சன், மன்னார் மாவட்ட Roll ball சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் விமலேஸ்வரன், பாடசாலையின் பிரதி அதிபர் சே.அஜித் ருக்சன் டலிமா, பொதுமக்கள், நலன் விரும்பிகள் மற்றும் ஏனையோரும் கலந்து சிறப்பித்தனர்.










