கிளிநொச்சி பாடசாலை ஒன்றின் வீணடிக்கப்படும் கற்றல் கற்பித்தல் நேரம்: குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் உயர்நிலை வகுப்புக்களை கொண்ட ஒரு பாடசாலையின் கற்றல் கற்பித்தல் நேரம் வீணடிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பாடசாலையின் இடைநிலை மாணவர்களுக்கு பாடசாலை கல்வித் திட்டத்திற்குள் உள் வாங்கப்பட்டிருக்காத இணைப் பாட விதானத்தில் மாணவர்களின் நேரத்தை வீணடிப்பது தொடர்பிலேயே அவர்கள் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.
பாடசாலையில் கற்றல் செயற்பாட்டுக்கான காலம் போதாமல் உள்ள இன்றைய சூழலில் இத்தகையதொரு செயற்பாடு விசனத்தை ஏற்படுத்தக்கூடியது என இது தொடர்பில் பொற்றோர்கள் சிலரும் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
பாடசாலைக் கல்வித் திட்ட விடயங்களிலேயே மாணவர்களின் முழுக் கவனமும் குவிக்கப்பட்டிருக்க வேண்டும். அதில் வெற்றி பெற்ற பின்னரே ஏனைய விடயங்களில் அவர்கள் தங்கள் ஈடுபாட்டைக் காட்ட வேண்டும் என்பதாக அவர்களது கருத்துக்களில் அமைந்திருந்தன.
நடந்தது என்ன
கடதாசி தாள்களை கொண்டு ஆக்கங்களை ஆக்குவது தொடர்பான விளக்கக் கையேடுகளை விற்பனை செய்து வரும் ஒருவரை அழைத்து வந்து மாணவர்களுக்கு அவை தொடர்பான விளக்கங்களை வழங்க அனுமதித்தது எந்த வகையிலும் பொருத்தமற்றதாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்திருந்தனர்.
கைவினைப் பொருட்களின் பயனும் அதனை ஆக்குவதற்கான பயிற்சியும் மாணவர்களுக்கு ஏற்படுத்தி விடும் நன்மைகளை விட பாடசாலைக் கல்வி மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் நன்மைகளின் அளவு அதிகமாக இருக்கும்.
ஆதலால் முதலில் பிள்ளைகள் பாடசாலைத் திட்டமிடலின் மூலம் அறிமுகப்படுத்தப்படும் விடயங்களிலேயே கூடிய கவனம் எடுக்க வேண்டும்.
வியாபார நோக்கம் கொண்ட இத்தகைய செயற்பாடுகளை மாணவரிடையே கொண்டு செல்வதால் கற்றலில் உள்ள நாட்டம் குறைந்து செல்ல வாய்ப்பேற்படும் என்பதாகவும் அவர்களது குற்றச் சாட்டுக்கள் இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள் நோக்கம் கொண்ட செயற்பாடு
பாடசாலை சார்ந்த சிலருக்கு நன்மைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதால் இத்தகைய செயற்பாடுகள் பாடசாலைக்குள் அனுமதிக்கப்படுவதாக ஆசிரியர் ஒருவர் சந்தேகம் எழுப்பியிருந்தார்.
மாணவர்களுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நற்பண்புகளையும் கற்றலையும் முன்னிறுத்தும் கல்விக் கொள்கையில் வியாபார நோக்கிலான செயற்பாடுகளை இடைநிலை மாணவரிடையே கொண்டு செல்கின்றனர்.
அதே வேளை கல்விக்கு பெருமளவு நன்மையற்ற விடயங்களை நோக்கி மாணவர்களைத் திசைதிருப்பி விடுகின்றனர்.
கொரோனா நிலைமைகளால் மாணவர்கள் படிக்க எடுக்கும் நேரங்கள் வீணடிக்கப்பட்டிருந்தது. இதனால் ஒரு வருடத்திற்குள் படித்து முடிக்க வேண்டிய பாடப்பரப்புக்களை குறுகிய காலத்தில் படித்து முடிக்க வேண்டிய சூழல் நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |