தோட்டங்களின் தரிசு நிலங்களை பயிர்ச்செய்கைக்கு வழங்கவில்லை: புத்திரசிகாமணி
பெருகி வரும் உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வாக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விவசாய உற்பத்தி திட்டத்திற்கு தரிசு நிலங்களை வழங்குவதில் தோட்ட நிறுவனங்கள் தாமதம் செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் புத்ரசிகாமணி தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பு ஒன்றின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிகையில்,
அரசாங்கம் அறிவுறுத்தல்
தோட்டங்களில் உள்ள தரிசு நிலங்களை விவசாயத்திற்காக இளைஞர்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியும் தோட்ட முகாமையாளர்கள் அதற்கேற்ற வகையில் செயற்படுவதில்லை.
நாடு எதிர் கொண்டுள்ள பொருளாதார மற்றும் உணவு நெருக்கடியில் இருந்து விடுபட, விவசாயத்தை மேம்படுத்த வேண்டும்.
தோட்டங்களில் உள்ள தரிசு நிலங்களை இளைஞர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்பட்டுள்ளது.
இது நல்ல திட்டம்தான் ஆனால் அதற்குத் தடையாக இருப்பது இந்த பெருந்தோட்ட நிறுவனங்களின் முகாமையாளர்கள்.
தரிசு நிலங்கள்
தரிசு நிலங்களை தோட்டத் தொழிலாளர்களுக்கு விவசாயத்திற்கு கொடுப்பது அல்ல, தென்னோலையைக் கொண்டு ஒரு குடிசையைக் கூட அமைக்க தோட்ட முகாமையாளர்கள் தோட்டத் தொழிலாளர்களை அனுமதிப்பதில்லை.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபா அதிகரிப்பை வழங்கத் தயங்கிய தோட்டக் கம்பனி முகாமையாளர்கள் தரிசு நிலத்தை வழங்குவார்களா என்பதில் சந்தேகம் உள்ளது.
கோரிக்கை
தோட்டங்களில் வேலை இழந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இந்த தரிசு நிலத்தை வழங்க அரசு நேரடியாகத் தலையிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது தோட்டங்களின் தரிசு நிலங்கள் இளைஞர்களுக்கு விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பிற்காக பகிர்ந்தளிக்கப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களிடம் வாக்குறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.