நாட்டில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற விபத்தில் ஒரு பெண் உட்பட மூவர் பலி(Photos)
களுத்துறை
களுத்துறையில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளார். பேருவளை - மக்கொன - ஹல்கந்தவில வீதியின் வெல்ல சந்திப் பகுதியில் மகொனவிலிருந்து ஹல்கந்தவில நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியே குறித்த பெண் உயிரிழந்துள்ளார் என்று பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் ஹல்கந்தவில அணைக்கட்டுச் சந்தியில் வசிக்கும் அனகியத்தயியகே நந்தாவதி (வயது 70) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் இன்று காலை அருகில் உள்ள சந்தைக்கு வந்து வீதியைக் கடக்கும்போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பெண்ணைக் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது ஏற்கனவே உயிரிழந்திருந்தார் என்று விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பயாகல பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரான அம்பாந்தோட்டைப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரை பயாகல பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம்
யாழ்.நாவாந்துறை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளும் பட்டா ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 35 வயதுடைய சக்திதாசன் டான்சன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
பட்டா ரக வாகனத்தைச் செலுத்திய சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் குடும்பத்தலைவர் உயிரிழப்பு
பட்டா வாகனம் –மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பத்தலைவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை 4 மணியளவில் நாவாந்துறை சூரியவெளி பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் வாகனத்தில் பயணித்த அதே இடத்தைச் சேர்ந்த சகாயதாசன் பவா (வயது 36) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையேஉயிரிழந்தார் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
கடலுணவு நிறுவனத்துக்கு சொந்தமான பட்டா வாகனத்தின் சாரதி விபத்தையடுத்து அங்கிருந்து தப்பி தலைமறைவாகினார்.
வாகனத்தை அங்கிருந்து எடுக்க சிலர் முற்பட்டதனால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் உறுதியளித்ததையடுத்து பதற்றநிலை தணிந்தது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்தி-தீபன்



