வவுனியா புகையிரதக் கடவையில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் - உறுப்பினர் விசனம்
வவுனியா புகையிரதக் கடவையில் வீதிக்குக் குறுக்காக நிறுத்தப்படும் பாதுகாப்புத்தடை சீரின்மையால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வவுனியா நகரசபை உறுப்பினர் ஜானுயன் விசனம் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், வவுனியா தலைமை புகையிரத நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள கடவையில், புகையிரதம் வருகைதரும் போது பிரதான வீதிக்குக் குறுக்காக நிறுத்தப்படும் பயணத்தடை முழுமையான வகையில் பொருத்தப்படவில்லை.
இதனால் வாகனங்களில் பயணிக்கும் பலர் புகையிரதம் வருகைதரப் போவதை உணர்ந்தும் பாதுகாப்பற்ற வகையில் கடவையைக் கடந்து செல்கின்றனர்.
தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இச்செயற்பாட்டால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் ஏற்பட்டுள்ளது. குறித்த வீதியானது அதிக வாகன போக்குவரத்து நிறைந்ததாகக் காணப்படுகின்றது.
எனவே அதனைக் கருத்தில் கொண்டும் விபத்துக்களைத் தடுக்கும் நோக்குடன், புகையிரதம் வருகைதரும் சந்தர்ப்பங்களில் குறித்த கடவையால் முற்றாகப் பயணிப்பதற்குத் தடை ஏற்படுத்தும் வகையில் கடவையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்ததுடன், புகையிரத கடவைகளால் பயணம் செய்யும் பொதுமக்களும் விதிமுறைகளைப் பேணி அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.