மதுரையில் தொடருந்தில் திடீர் தீப்பரவல்: 10 பேர் பலி; 25 பேர் காயம்
மதுரை லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் தொடருந்தில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 25 பேர் காயமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து இன்று (26.08.2023) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வெடித்து சிதறிய எரிவாயு சிலிண்டர்
உத்திர பிரதேச மாநிலம் லக்னோ ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் ஆன்மீக சுற்றுலா தொடருந்து அதிகாலை மதுரை தொடருந்து நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த தொடருந்து மதுரை தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் தொடருந்திலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து குறித்து விசாரணை
இதனை தொடர்ந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
சம்பவத்தில் இறந்தவர்களின் உடலை சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் பார்வையிட்டதுடன் மதுரை அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரின் உடல் நிலை குறித்தும் கேட்டறிந்துள்ளார்.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 இலட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெற்கு தொடருந்து நிலையம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்படட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |