நானுஓயா குறுக்கு வீதியில் விபத்து
நுவரெலியா - நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் லொறி ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
இன்று(02) அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
வாகனத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
பொலிஸாரின் வேண்டுகோள்
இந்நிலையில் விபத்திற்குள்ளான லொறியில் பயணித்த இருவரும் மயிரிழையில் எந்தவித காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நானுஓயா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், குறித்த லொறியினை பாரம் தூக்கியின் துணையுடன் மீட்டெடுத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த வீதியில் அதிகமாக வெளி மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகிறது. பெரும்பாலான விபத்து சம்பவங்கள் வீதியில் அதிக வேகமாக செல்லும் வாகனங்களினால் ஏற்பட்டுள்ளன என்று நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
அத்துடன், பெரும்பாலான வீதி விபத்துக்கள் சாரதிகளின் கவனயீனத்தினால் ஏற்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வீதி செங்குத்தான அதிக சரிவுகளையும் பாரிய வளைவுகளையும் கொண்டுள்ளதால், தகுந்த தடையாளிகளை பாவித்து வாகனங்களை செலுத்த வேண்டும் போன்ற வசனங்கள் எழுதப்பட்ட அறிவிப்பு பலகைகளும் இவ்வீதியில் ஏராளமான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
குறித்த வீதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் இவ்வீதியின் ஊடாக கனரக வாகனங்கள் செல்வதற்கு நுவரெலியா மாவட்ட செயலகம் தடை விதித்துள்ளது. இந்த வீதியூடாக கனரக வாகனங்கள் செல்வதை தடை செய்வதற்காக நானுஓயா பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே இந்த வீதியை போக்குவரத்துக்காக பயன்படுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறும் நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |