அமெரிக்க மியாமி விமான நிலையத்தில் விபத்து - 5 பேர் உயிரிழப்பு
அமெரிக்க மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து நேற்று(06.09.2026) இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் சிக்கி, 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
32 ஆண்டுகள் பழமையான விமானம் விபத்து
மேலும் சிலர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவானில் இருந்து வந்த விமானம், தரையிறங்கும்போது ஓடுபாதையைத் தாண்டிச் சென்று அருகிலுள்ள சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதி தீப்பிடித்துள்ளது.

இதேவேளை 21 ஏர் நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த இந்த போயிங் 767 விமானம் 32 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகின்றது.
200 அவசரகாலப் பணியாளர்களின் தீவிர முயற்சி
அத்துடன் சுமார் 200 அவசரகாலப் பணியாளர்கள் தீவிர முயற்சிக்குப் பின் தீயைக் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும், விமானி, துணை விமானி மற்றும் கார்களில் இருந்த சிலர் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்துக்கான காரணம் குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை (NTSB) விசாரணை நடத்தி வருகின்றது. விபத்து காரணமாக மியாமி விமான நிலையத்தில் 160க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, பல விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
இந்தச் சம்பவத்திற்கு அமேசான் நிறுவனம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகக் கூறியுள்ளது.