ஹட்டனில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்: நோயாளர்காவு வண்டி சாரதி கைது
ஹட்டன் - அளுத்கம பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் பலத்த காயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.
பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர்காவு வண்டியொன்று மூன்று முச்சக்கரவண்டிகளின் மீது மோதி பின், வீடொன்றின் நுழைவாயில் மீது மோதியுள்ளது.
டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதி
சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு இலக்கான மூன்று பேரும் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தினால் குறித்த வீட்டுப் பகுதி சேதமடைந்துள்ளதுடன், குறித்த மூன்று முச்சக்கரவண்டிகளும் சேதமாகியுள்ளன.
நோயாளர்காவு வண்டி சாரதி கைது
சம்பவம் இடம்பெற்ற போது நோயாளர்காவு வண்டியின் சாரதி மதுபோதையில் இருந்ததாகவும், அவரை பிரதேச மக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் நோயாளர்காவு வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.









