வீடுகளிலேயே அஞ்சலி செலுத்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள தமிழ் மக்கள் - தர்மலிங்கம் சுரேஸ்
கோவிட் காரணமாக மிக மோசமான அழிவுகளை எதிர்கொண்டுவருவதால் வீடுகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி விளக்கேற்றி உறவுகளை நினைவுகூர வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.
கோவிட் அச்சுறுத்தல் காரணமாக கட்சி ஆதரவாளர்கள் இன்றி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இந்த நிகழ்வு நேற்று காலை நடைபெற்றுள்ளது.
இதன்போது படுகொலைசெய்யப்பட்டவர்களின் நினைவாக ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் அச்சம் காரணமாக தங்களது வீடுகளிலோயே விளக்கேற்றி அஞ்சலி செலுத்தும் நிலைமைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கோவிட் காரணமாக மிக மோசமான அழிவுகளை எதிர்கொண்டுவருவதால் வீடுகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி விளக்கேற்றி உறவுகளை நினைவுகூரவேண்டும்.
தமிழ் மக்களுக்கு இடம்பெற்ற அநீதிகளுக்கு நீதியைப்பெற வேண்டுமானால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அதன் மூலமாக தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும்.
வடக்கு, கிழக்கில் நடைபெற்ற இனப்படுகொலைகளை நினைவுகூருவதன் மூலமாக தமிழ் மக்களின் இழப்புக்கான நீதியைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அதன்காரணமாக பொறுப்புள்ள கட்சியென்ற அடிப்படையில் நினைவு தினத்தினை அனுஸ்டித்து வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

