இலங்கை திருநங்கைகளின் அவல நிலைமை: வெளியான தகவல்கள்
இலங்கையில் தவறான தொழில்களில் ஈடுபடும் திருநங்கைகளில், 25- 30 சதவீதமானவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என ஆய்வுத் தகவல்களில் தெரியவந்துள்ளது.
இவர்கள் ஐஸ், ஹெரோயின், கஞ்சா, மரிஜுவானா மற்றும் மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதாக திருநங்கை சமத்துவ அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் கசுனி மாயாதுன்னா கவலை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 5,000 பேர்
இலங்கையில் 5,000 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் குடும்பங்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் தவறான தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக அமைப்பின் பதிவு செய்யப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
பல தவறான தொழில்களில் ஈடுபடும் திருநங்கைகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாடகை அறைகள் அல்லது பகிரப்பட்ட தங்குமிடங்களில் வசிக்கின்றனர்.
இதனால் போதைப்பொருள் மற்றும் அடிப்படை வாழ்க்கைச் செலவுகளுக்காக தவறான தொழிலாளர்களாக தொடர்ந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படுகிறது.
துன்புறுத்தல்கள்
புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கு பலர் விருப்பம் தெரிவிப்பதில்லை. மீட்சியின் பின்னர் அவர்களைப் பராமரிக்க குடும்ப ஆதரவு அமைப்பு இல்லாததால் பலர் மறுவாழ்வுத் திட்டங்களைத் தவிர்க்கின்றனர்.

பொலிஸாரால் கைது செய்யப்படும் இவர்கள் தாக்குதல்கள், சட்டவிரோத தடுப்புக்காவல், சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், சமூக துன்புறுத்தல்கள் மற்றும் வேறு பல பிரச்சினைகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |