ஆடி அடங்கும் வாழ்க்கையடா! நிறைவேற்று அதிகார கோட்டாவின் எதிர்காலம்!
ஜே. ஆர். ஜெயவர்த்தன
ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றமுடியாததை தவிர, ஏனைய அதிகாரங்கள், இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு உண்டு.
இதனை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் கர்த்தாவான முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவே கூறியிருந்தார்.
எனினும் அவரும் அந்த அதிகாரத்தினால், நினைத்ததை செய்துக்கொள்ளமுடியவில்லை.
ஒரு கட்டத்தில் இந்தியாவுடன் முரண்படமுடியாமல், இந்திய- இலங்கை உடன்படிக்கைக்கு இணங்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.
இறுதியில் அவர் மரணிக்கும்போது முன்னாள் ஜனாதிபதி இறந்துவிட்டார் என்ற துக்கத்தைக் கூட இலங்கை மக்கள் அவ்வளவாக உணரவில்லை.
ஆர். பிரேமதாச
அடுத்ததாக வந்த பிரேமதாசவுக்கும் இதே நிலைதான். அவரும் இந்தியாவுடன் முரண்பட்டு இறுதியில் சௌமியமூர்த்தி தொண்டமானை மத்தியஸ்தராக கொண்டு பிரச்சினை தீர்க்கப்பட்டது.
டி.பி விஜயதுங்க
அவருடை பதவிக்காலம் குறுகியதாகவே இருந்தது. எனவே அவர் பெரிதாக செயற்படவில்லை.
சந்திரிகா குமாரதுங்க சந்திரிகா
குமாரதுங்கவும் தாம் எடுத்த காரியங்களை செய்ய முடியவில்லை. இனப்பிரச்சினை தீர்வுக்கான பொதியை கொண்டு வந்தபோதும் அதனை அவரால், தமது அதிகாரங்களைக் கொண்டு நடைமுறைப்படுத்தமுடியவில்லை.
ரணில் விக்கிரமசிங்க தரப்பினரே அதனை நாடாளுமன்றில் வைத்து எரியூட்டினர்.
மைத்ரிபால சிறிசேன
கோட்டாபயவுக்கு முன்னாள் இருந்த மைத்ரியும் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு நாட்டின் முக்கிய இனப்பிரச்சினையை தீர்க்கவில்லை.
மகிந்த ராஜபக்ச
நிறைவேற்று அதிகாரத்தை வைத்துக் கொண்டு முக்கிய தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை காணவில்லை.
அதற்கு பதிலாக அவர் போர் ஒன்றை நடத்தினார்.
எனினும் அதனால் அவருக்கு சிங்கள மக்கள் மத்தியில் ஒரு தற்காலிக அரசியல் அந்தஸ்து கிடைத்ததே தவிர, நாட்டுக்கு நன்மையேதும் கிடைக்கவில்லையென்பதை இப்போது சிங்கள மக்களே உணர்ந்துள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ச
கோட்டாபய ராஜபக்ச, நிறைவேற்று அதிகாரத்தை வைத்துக்கொண்டு அதற்கு அப்பால், 20வது திருத்தத்தின்கீழ் மேலதிக அதிகாரங்களையும் பெற்றுக்கொண்டார்.
ஆனால் இயற்கை அவருக்கு எதிராக மாறியது.
கொரோனா வடிவில் வந்த இயற்கை கோட்டாவின் அதிகாரங்களை செயற்படுத்தவிடவில்லை.
அத்துடன் அவரின் யதார்த்தமில்லாத தீர்மானங்களும் அவரை வீழ்த்தி விட்டன.
இன்று அதிகாரங்கள் இருந்தும் அதிகாரம் அற்றவராக பொதுமக்கள் மத்தியில் அவர் பார்க்கப்படுகிறார்.
எனவே ஏனைய நிறைவேற்று அதிகாரங்களை கொண்ட ஜனாதிபதிகளை காட்டிலும் கோட்டாபயவே நிறைவேற்று அதிகாரங்களை நடைமுறைப்படுத்தி பார்க்கமுடியாதவராக இதுவரை கருதப்படுகிறார்.
எதிர்காலத்தில் உள்ள மூன்று வருடங்களிலும் அவரால் அந்த அதிகாரங்களை பயன்படுத்த இலங்கையின் நிலை கைகொடுக்காது என்றே கருதப்படுகிறது.
நிறைவேற்று ஜனாதிபதியை விரும்பிய தமிழ் பேசும் மக்கள்
இதேவேளை சிங்கள சமூகத்தைக் காட்டிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களே பெரிதும் விரும்பினர்.
இதற்கான காரணம், நிர்வாக அதிகாரங்களை தமக்கு பகிரும்போது, நாடாளுமன்றத்தின் ஊடாக அதனை செய்யமுடியாது.
நிறைவேற்று அதிகாரம் கொண்;ட ஜனாதிபதியினால் மாத்திரமே அதனை செய்யமுடியும் என்பதே அவர்களின் கருத்தாக இருந்தது.
ஆனால், அதே நிறைவேற்று அதிகாரமே அவர்களை இல்லாதொழிக்க பயன்படுத்தப்பட்டது என்பதே யதார்த்தம்.
எனவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு விடைகொடுக்க இலங்கை தயாராகவேண்டும்.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
