கொழும்பு புறநகர் பகுதியில் பெண்ணொருவர் கொடூர கொலை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கைது
கொழும்பு புறநகர் பகுதியான பாதுக்க, வட்டரெக்க பிரதேசத்தில் பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று (09.05.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வாடகை வீடொன்றில் கட்டட பணியாளர் ஒருவருடன் வசித்து வந்த 52 வயதுடைய காதல் மனைவியே இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரு சந்தேகநபர்கள் கைது
கைது செய்யப்பட்டவர்களில் பெண் சந்தேக நபர், குறித்த கட்டட பணியாளரின் முன்னாள் மனைவி என்றும் மற்றயவர் அவரின் தம்பி என்றும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பெண் சந்தேகநபர் கட்டட பணியாளரை விவாகரத்து செய்து சுமார் மூன்று வருடங்கள் ஆவதாகவும், அதனால் தான் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வந்ததாக கட்டிட பணியாளர் வாக்குமூலம் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
இன்று காலை குறித்த கட்டட பணியாளர் வேலைக்காக வீட்டை விட்டு வெளியே சென்ற பின்னர் சந்தேகநபர்களான முன்னாள் மனைவியும் அவரது தம்பியும், உயிரிழந்த பெண்ணை வீட்டிற்கு வெளியே அழைத்து வந்து கூரிய கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



