சார்ல்ஸ் நிர்மலநாதன் தொடர்பில் பௌத்த தேரர் பகிரங்க குற்றச்சாட்டு (Video)
பூர்வீக தொல்பொருட்களை விரிவாக்கம் செய்வதற்காக தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை நாங்கள் அபகரிக்கின்றோம் என ஒரு பொய்யான கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் சமூகத்தில் வெளியிட்டுள்ளார் என குருந்தூர் விகாரை மற்றும் சபுமல்கஸ்கட விகாரையின் விகாராதிபதி கல்கமுவே சந்தபோதி தேரர் தெரிவித்துள்ளார்.
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் காணொளி ஒன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
அபிவிருத்தி செயற்பாடுகள்
நாங்கள் குருந்தூர் மலையில் நேற்று அபிவிருத்தி செயற்பாடுகளை ஆரம்பிக்கவில்லை.அதனை கடந்த 2018 ஆம் ஆண்டு ஆரம்பித்தோம்.
இதன்போது சில காரணங்களால் சுமார் ஒன்றரை வருடங்கள் குருந்தூர் மலை விரிவாக்க செயற்பாடுகளை இடைநிறுத்தி இருந்தோம். இந்த சந்தர்ப்பத்தில் தமிழர்கள் குறித்த மலைக்கு சென்று குருந்தூர் மலையின் பூர்வீக சொத்துக்களுக்கு பாரிய சேதங்களை ஏற்படுத்தி இருந்தார்கள்.
அவற்றுக்கு மன்னிப்பு வழங்கி 2020 ஆம் ஆண்டு மீண்டும் அபிவிருத்தி செயற்பாடுகளை ஆரம்பிக்க திட்டமிட்டோம். பல்வேறு செயற்பாடுகளின் பின்னர் கடந்த வாரம் தூண்கள் அமைக்கும் நடவடிக்கையை ஆரம்பித்தோம்.
தமிழ் மக்களின் இடங்கள் அபகரிப்பு
இந்த நிலையில், தூண்கள் அமைக்கப்பட்டு 3 நாட்கள் ஆகும் முன்னர் சார்ல்ஸ் நிர்மலநாதன் நாங்கள் தமிழ் மக்களின் இடங்களை ஆக்கிரமிப்பதாக பொய்யான ஒரு கருத்தை முன்வைத்தார்.
அத்துடன் நாங்கள் தமிழ் மக்களின் இடங்களை அபகரிப்பதாகவும், மக்களுக்கு விவசாயம் செய்ய முடியவில்லை எனவும் அறுவடைகளை கூட செய்ய முடியாத நிலைக்கு தூண்களை அமைத்திருக்கின்றார்கள் என மிகவும் பிழையான கதை ஒன்றை நாடாளுமன்றத்தில் வைத்து அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிடம் கூறியிருந்தார்.
தூண்களை அமைத்ததன் பின்னர் அளவீட்டு நடவடிக்கைகளை ஆரம்பிக்க இருந்தோம். இதன்போது அமைச்சர் விதுர விக்ரமநாயக்க சார்ல்சின் கதையை மாத்திரம் கேட்டு இந்த நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு கூறினார்.இதற்கமைவாக நாங்களும் குறித்த நடவடிக்கைகளை நிறுத்த வேண்டி ஏற்பட்டது.
குருந்தூர் மலை போராட்டம்
நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதனின் இந்த பொய்யான கருத்தை கேட்டுக் கொண்டே சுமார் 100 தமிழ் மக்கள் ஒன்றினைந்து குருந்தூர் மலை விகாரையை நோக்கி புறப்பட்டு வந்து போராட்டங்களை முன்னெடுத்தார்கள்.
அதன் பின்னர் பொலிஸார் வந்து அவர்களுடன் கலந்துரையாடும் போது பொலிஸாரின் கருத்துகளுக்கும் அவர்கள் செவிமடுக்கவில்லை. இவ்வாறு சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயற்படுவதற்கு இவர்களுக்கு எவ்வாறு அதிகாரம் கிடைத்தது? யாரிடம் இருந்து இந்த அதிகாரம் கிடைத்தது?
இவ்வாறான அதிகாரங்கள் கிடைக்கப்பெற்று இந்த நிலை தொடர்ந்தால் இந்த குருந்தூர் மலை மட்டுமல்ல வடக்கு கிழக்கில் வாழும் சிங்களவர்களை துரத்திவிட்டு அந்த இடங்களையும் எடுத்துக்கொள்வார்கள்.
டயஸ்போராக்கள்
கடந்த நாட்களில் டயஸ்போராக்கள் சிலர் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்திடம், வடக்கு,கிழக்கில் பல்வேறு அபிவிருத்திகளை செய்வதாக கூறி, நம்முடைய கடன்களை திருப்பி செலுத்துவதாக உறுதியளித்து அவர்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முயற்சித்தார்கள்.
அவர்களின் இந்த கோரிக்கைக்கு தற்போதுள்ள அரசாங்கம் வழங்கிய பதில் காரணமாகவே அவர்களுக்கு இவ்வாறானதொரு அதிகாரம் கிடைத்துள்ளது.
நாங்கள் என்ன செய்தாலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இந்த வடக்கும் கிழக்கும் பிளவுப்பட்டால் தெற்கில் விகாரைகளில் வழிபாடுகளில் ஈடுப்படுவதற்கு நமக்கு ஒரு இடம் கிடைக்காது. வடக்கு கிழக்கு தொடர்ந்தும் அழிவடைவதற்கு இடமளித்து கொண்டிருந்தால் எதிர்காலத்தில் நாம் சாபத்தையே அனுபவிக்க நேரிடும்.
நாடு பிளவுப்படும்
ஆகவே ஏனைய அனைத்து வேலைகளையும் ஒத்திவைத்து விட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உதவுமாறு தேரர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். இது ஒத்திவைக்க கூடிய ஒரு விடயம் அல்ல.
அவ்வாறு ஒத்திவைத்தால் இந்த நாடு நிச்சயமாக இரண்டாக பிளவுப்படும். பிளவடைந்ததன் பின்னர் இந்த நாட்டை ஒன்று சேர்க்க முடியாது. இந்த நாட்டை இரண்டாக பிரிப்பதற்காக முழு சர்வதேசமும் அவர்களுடன் ஒன்றினைந்து செயற்படுகின்றது.” என குறிப்பிட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த குருந்தூர் மலையின் விரிவாக்கம்







