நாட்டில் ஏற்படும் முரண்பாடுகள் குறித்து பொலிஸ் மா அதிபர் வழங்கியுள்ள ஆலோசனை(Photos)
பொலிஸ் அதிகாரிகள் என்ற ரீதியில் ஊடகவியலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது எப்படி, அதேநேரம் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளை நிறைவேற்றுவது எப்படி என்ற முறையில் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
வடமாகாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுடன் ஏற்படும் பிரச்சினைகளை எப்படி தவிர்ப்பது என்பது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இன்று (01.07.2023) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,நாட்டில் வெவ்வேறு தரப்புக்கள் இருப்பதால், அத்தரப்புக்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்படாத வகையில், இரு தரப்பினருக்கும் இடையே பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் எவ்வாறு செயற்பட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவுறுத்தல்களை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருந்தார்.
விழிப்புணர்வு செயற்றிட்டம்
மேலும் போராட்டங்களை தடுக்கும் போது, முரண்பாடான நிலையை ஏற்படுத்திக் கொள்கின்றனர். உண்மையில், அவ்வாறான நிலையை ஏற்படுத்திக்கொள்ள முடியாது.
அத்துடன் ஊடகவியலாளர்கள் சமூக சேவை செய்கின்றார்கள். பொலிஸாரும் 24 மணி நேரம் கடமையில் இருப்பதனால் இரு தரப்பினருடைய சேவைகளும் சமூகத்திற்கு அவசியமானது.
வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்
எனவே சமூகத்துடன் நேரடியாக தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டால் சமூகத்திற்கு உதவியாக இருக்கும். அதேநேரம், பொலிஸாரின் கௌரவத்திற்கும் முக்கியமானதாக இருக்கும்.
இந்த விடயங்களை உணர்ந்து செயற்படும் போது அந்தந்தத் தரப்பினர்களிடையை பிரச்சினைகளையும், முரண்பாடுகளையும் தீர்த்துகொள்ள முடியும் என நம்புகிறேன் என்றார்.
மேலும் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, முல்லைத்தீவு, மன்னார், போன்ற பகுதிகளில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதால் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




