விண்ணுக்கு ஏவப்பட்ட சிறிய தொழிற்சாலை
அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) விண்கலம் மூலம் கடந்த கோடையில் விண்ணுக்கு ஏவப்பட்ட மைக்ரோவேவ் அளவிலான ஒரு சிறிய தொழிற்சாலை, தற்போது விண்வெளியில் வெற்றிகரமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது.
இதனூடாக வேல்ஸின் கார்டிஃப் நகரைச் சேர்ந்த 'ஸ்பேஸ் ஃபோர்ஜ்' (Space Forge) என்ற நிறுவனம், விண்வெளியில் சுமார் 1,000 பாகை செல்சியஸ் வெப்பநிலையை எட்டக்கூடிய மின் உலை (Furnace) ஒன்றை இயக்கி சாதனை படைத்துள்ளது.
நவீன விமானங்களின் செயல்திறன்
பூமியில் இருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் உயரத்தில், புவி ஈர்ப்பு விசை இல்லாத நிலையில் குறைக்கடத்திகளை (Semiconductors) தயாரிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

விண்வெளியின் வெற்றிடமும், எடையற்ற நிலையும் குறைக்கடத்திகளின் அணுக்கள் மிகத் துல்லியமாக சீரமைக்கப்படுவதற்கு உதவுகின்றன.
இதன் மூலம் பூமியில் தயாரிக்கப்படுவதை விட 4,000 மடங்கு அதிக தூய்மையான குறைக்கடத்திகளை விண்வெளியில் உருவாக்க முடியும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜோஷ் வெஸ்டர்ன் தெரிவித்துள்ளார்.
இத்தகைய உயர்தர குறைக்கடத்திகள் 5G கோபுரங்கள், மின்சார வாகன சார்ஜர்கள் மற்றும் நவீன விமானங்களின் செயல்திறனைப் பெருமளவு மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் தயாரிக்கப்படும் பொருட்கள்
இந்தச் சோதனையின் வெற்றியைத் தொடர்ந்து, 10,000 சிப்களைத் தயாரிக்கும் திறன் கொண்ட பெரிய அளவிலான விண்வெளித் தொழிற்சாலையை உருவாக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

விண்வெளியில் தயாரிக்கப்படும் பொருட்களைப் பூமிக்கு மீண்டும் கொண்டு வருவதற்காக, 'பிரிட்வென்' (Pridwen) என்று பெயரிடப்பட்ட வெப்பத் தடுப்புக் கவசத்தையும் (Heat Shield) அவர்கள் சோதித்து வருகின்றனர்.
மருந்துப் பொருட்கள் முதல் செயற்கைத் திசுக்கள் வரை பலவற்றை விண்வெளியில் தயாரிக்கும் புதிய பொருளாதார யுகத்திற்கு இது ஒரு தொடக்கமாகக் கருதப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |