மன்னார் முட்டை விற்பனையாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை(Video)
மன்னாரில் முட்டையின் விலை குறைக்கப்படவில்லை என்பதுடன் சந்தையில் விற்பனைக்கு முட்டை வரவில்லை என உள்ளூர் முட்டை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் முட்டை விலை இன்று (22) திங்கட்கிழமை முதல் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் முட்டை விலை குறைக்கப்படவில்லை என்பதுடன் மன்னாரில் முட்டை விற்பனையாளர்களிடம் விற்பனைக்கு முட்டைகள் இல்லாத நிலையே காணப்படுகின்றது.
முட்டை விலை குறைப்பு
அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, முட்டை விலை குறைப்பு தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று முதல் முட்டையின் விலைகள் குறைக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்திருந்தது.
கோழித்தீன் விலை
அதேவேளை கோழித்தீன் போன்றவற்றின் விலைகளை அரசாங்கம் குறைக்காமல் முட்டையின் விலையை குறைத்தால் இதேபோன்று முட்டை விற்பனைக்கு வராத நிலையே ஏற்படும் எனவும் அரசாங்கம் கோழிகளுக்கான தீன்களின் விலையை முதலில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் முட்டை விலை மாத்திரம் இன்றி கோழி இறைச்சியின் விலையும் குறைவடையும் என உள்ளூர் கோழி மற்றும் முட்டை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய நாள் நிலவரப்படி ஒரு கிலோ கோழி இறைச்சி 1600 ரூபாவாகவும் ஒரு வெள்ளை முட்டையின் விலை 70 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.