தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்ட குளம்: குற்றம் சுமத்தும் பொதுமக்கள்
வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டைப் பகுதியில் உள்ள குளம் ஒன்று தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் நிலையில், அதன் கீழ் உள்ள விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளதாக அப் பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மருதோடை கிராம அலுவலர் பிரிவின் ஒரு கிராமமே காஞ்சிரமோட்டை.
1977 ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தென்னிலங்கையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் காரணமாக இடம் பெயர்ந்த 300 தமிழ் குடும்பங்கள் காஞ்சிரமோட்டை மற்றும் அதன் அருகில் உள்ள காட்டு பூவரசங்குளம், நாவலர் பண்ணை போன்ற கிராமங்களில் காந்தீயம் அமைப்பினரால் குடியேற்றப்பட்டனர்.
வனவளதிணைக்களத்தின் அச்சுறுத்தல்
1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிலர் காணாமல் போன சம்பவத்தையடுத்து, கிராமங்களில் வசித்த மக்கள் அச்சம் காரணமாக கட்டம் கட்டமாக இடம்பெயர்ந்து உள்நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் குடியேறியதுடன், பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து இந்தியாவுக்கும் சென்றிருந்தனர்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் மீளவும் பல குடும்பங்கள் குடியேறிய நிலையில் அடிப்படை வசதிகள் இன்மையாலும், வனவளதிணைக்களத்தின் அச்சுறுத்தலாலும் மீள இடம்பெயர தற்போது 40 வரையான குடும்பங்கள் மாத்திரமே வசித்து வருகின்றன.
இப்பகுதியில் நீண்ட காலமாக புனரமைக்கப்படாது இருந்த பண்ணை புளியங்குளம் என்கின்ற குளமானது தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு வயல் நிலமாக மாற்றப்படுவதாக அங்கு வசிக்கும் பொது மக்களும், மருதோடை கமக்கார அமைப்பும் குற்றச் சாட்டியுள்ளனர்.
மருதோடை கமக்கார அமைப்பின் குற்றச்சாட்டையடுத்து அப்பகுதிக்கு இன்று(25.02.2024) விஜயம் செய்த கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் விமலரூபன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் குளத்தின் தற்போதைய நிலையை பார்வையிட்டனர்.
புனரமைப்பு நிதி
இதன்போது குளத்தின் அணைகட்டு அகற்றப்பட்டு அக்குளம் ஆக்கிரமிக்கப்படுவதாக தெரிவித்த அதிகாரிகள், மக்களின் முறைப்பாட்டை கேட்டறிந்ததுடன், இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில கருத்து தெரிவித்த காதர் மஸ்தான், குறித்த பகுதியில் தனிநபர் ஒருவர் குளத்தை ஆக்கிரமிப்பதாக அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.
இதனை அந்த திணைக்கள அதிகாரிகளும் உறுதிப்படுததியுள்ளனர். குறித்த பாழடைந்த குளத்தை மீள புனரமைப்பதற்கு தேவையான நிதி இந்த வருடத்திலேயே பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், குறித்த குளத்தின் கீழான விவசாய செய்கை சுமார் 70 ஏக்கர் வரை இடம்பெறும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளதுடன், காணியற்ற அப் பகுதி மக்களுக்கு ஒரு ஏக்கர் வீதம் காணி வழக்குமாறும் அமைப்புக்கள் கோரியுள்ளன.
இது தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளோம். அத்துடன் குளத்தை ஆக்கிரமித்துள்னள தனிநபரிடமும் அதிகாரிகள் ஊடாக ஆவணங்களை கோரியுள்ளோம்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |