இலங்கை வரலாற்றில் எந்தவொரு அரசியல்வாதியும் எடுக்காத முடிவை எடுத்த ஜனாதிபதி ரணில்
இலங்கையில் இதற்கு முன்னர் எந்தவொரு அரசியல்வாதியும் எடுக்காத சில தீர்மானங்களை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க துணிச்சலாக எடுத்திருந்தார். உண்மையில், இந்த முடிவு மிகவும் முன்னதாகவே எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது, பாரம்பரிய கட்டமைப்பிற்கு வெளியே தயாரிக்கப்பட்டது.
மக்களுக்கு உடனடி குறுகியகால பலன்கள் கிடைக்கும் வகையில் சம்பள உயர்வு, வரி குறைப்பு போன்றவற்றை வழங்க வேண்டும் என்பதே வரவுசெலவுத்திட்டம் குறித்த நமது எதிர்பார்ப்பாகவும், பாரம்பரியமான சிந்தனையாகவும் காணப்படுகிறது.
இந்த நேரத்தில், கடந்த ஏழு தசாப்தங்களில் அனுபவிக்காத மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் நாம் இருக்கிறோம்.
தற்போது நாம் எதிர்கொள்ளும் இந்த பொருளாதாரச் சிக்கலில் இருந்து வெளியேறுவதை உறுதி செய்வதே தற்போதைய தேவையாகும். அதனால் நாம் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்திக்க வேண்டும்.
வரவுசெலவுத் திட்டத்தின் பின்னணியில் உள்ள நோக்கம்
வருமானம் மற்றும் செலவுகளை எடுத்துக் கொண்டால், வரி மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து நாம் பெறும் வருமானத்தை விட நமது செலவு மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகம். ஒரு குடும்பத்தில் கூட, உங்கள் செலவு வீட்டு வருமானத்தை விட அதிகமாக இருந்தால் கடனில் மூழ்கிவிடுவீர்கள்.
எனவே, நமது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் வரை வரி வருமானம் மற்றும் செலவுகளை சிறிது காலத்திற்கு மறுசீரமைக்க வேண்டும்.
கடந்த ஐந்து அல்லது ஆறு தசாப்தங்களாக அழிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதே வரவுசெலவுத் திட்டத்தின் பின்னணியில் உள்ள ஒரே நோக்கமாகும்.
புதுமையான தீர்வுகளும், அணுகுமுறைகளுமே எமக்குத் தற்பொழுது தேவையாக உள்ளன. மக்களும் இதற்குத் தயாராக இருக்க வேண்டும். வேறுவழியில் சென்றால் விரும்பியதை அடைய முடியாது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இலங்கையில் இதற்கு முன்னர் எந்தவொரு அரசியல்வாதியும் எடுக்காத சில தீர்மானங்களை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க துணிச்சலாக எடுத்திருந்தார். உண்மையில், இந்த முடிவு மிகவும் முன்னதாகவே எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
தற்போது 52 அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை எடுத்துக் கொண்டால், திரட்டப்பட்ட இழப்பு சுமார் 1100 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
விமானத்தில் ஏறாத ஒரு விவசாயி அல்லது தொழிலாளி இதற்குப் பணம் செலுத்துகிறார். எனவே, நாம் பொருளாதாரத்தை மறுசீரமைக்க வேண்டும் மற்றும் இந்த குழப்பத்தில் இருந்து நாம் வெளியேற வேண்டும். இதற்கு நாம் காட்டிய பாதையே இந்த வரவுசெலவுத்திட்டமாகும் என குறிப்பிட்டுள்ளார்.